eஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி!

Published On:

| By Balaji

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (ஏப்ரல் 18) ஒரே நாளில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் 196 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

டெல்லி அணியில் ரஹானே, டாம் கர்ரன் நீக்கப்பட்டு ஸ்டீவன் சுமித், புதுமுக வீரர் லுக்மன் மெரிவாலா சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் ஒரே மாற்றமாக முருகன் அஸ்வினுக்கு பதிலாக ஜலஜ் சக்சேனா இடம் பெற்றார். ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி பஞ்சாப்பின் இன்னிங்ஸை கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இருவரும் டெல்லி பந்து வீச்சை பின்னியெடுத்தனர். ஒரு சில கேட்ச் ஆபத்தில் இருந்து தப்பித்த இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 59 ரன்கள் சேகரித்தனர்.

தொடர்ந்து பம்பரமாகச் சுழன்ற இவர்கள் ரபடாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டி அவரை மிரள வைத்தனர். 10.1 ஓவர்களில் பஞ்சாப் 100 ரன்களைக் கடந்தது.

ஸ்கோர் 122 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை ஒரு வழியாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மெரிவாலா பிரித்தார். அவரது பந்து வீச்சில் மயங்க் அகர்வால் (69 ரன், 36 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் தனது 23ஆவது அரை சதத்தை நிறைவு செய்த லோகேஷ் ராகுல் 61 ரன்களில் (51 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ரபடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி பகுதியில் ரன் வேகம் சற்று குறைந்தது. கிறிஸ் கெய்ல் 11 ரன்னும், நிகோலஸ் பூரன் 9 ரன்னும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதி ஓவரில் தமிழக ஆல்-ரவுண்டரான ஷாருக்கான் 2 பவுண்டரியும், ஒரு சிக்சரும் ஓடவிட்டு அணியின் ஸ்கோரை 190 ரன்களை எட்ட வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. தீபக் ஹூடா 22 ரன்னுடனும், ஷாருக்கான் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மெரிவாலா, ரபடா, அவேஷ்கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் (5.3 ஓவர்) எடுத்து அருமையான தொடக்கம் தந்தனர். தவானின் ரன் மழையால் டெல்லி அணி இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான் 92 ரன்களில் (49 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), ஜய் ரிச்சர்ட்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதற்கிடையே ஸ்டீவன் சுமித் 9 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்டும் (15 ரன்) தாக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் தவான் கொடுத்த அடித்தளத்தை பஞ்சாப் பவுலர்களால் அசைக்க முடியவில்லை.

டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன்னுடனும், லலித் யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த இரண்டாவது தோல்வியாகும்.

**இன்று (ஏப்ரல் 19) இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.**

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share