இந்த (2020) ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை தோல்வியைச் சந்தித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியிலாவது வெல்லுமா என்ற மிகப் பெரிய கேள்வி சென்னை ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிகரமாகப் போட்டியைத் தொடங்கியது. ஆனால் அதன்பிறகு ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்து விமர்சனத்துக்குள்ளானது.
தனது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் திடீரென எழுச்சி பெற்ற சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பைத் தோற்கடித்தது. அதை அடுத்து சென்னை அணி மீண்டும் பழைய மோசமான நிலைக்கே திரும்பியது. கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது. ஏழு ஆட்டங்களில் ஆடி இருக்கும் சென்னை அணி இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என்று நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
சென்னை அணியின் பேட்டிங் மெச்சும் வகையில் இல்லை. பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்று அந்த அணியின் கேப்டன் டோனியே ஒப்புக்கொண்டு இருக்கிறார். பிளிஸ்சிஸ் (307 ரன்கள்) மட்டுமே பேட்டிங்கில் நன்றாகச் செயல்பட்டு வருகிறார். மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரின் பேட்டிங் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. கடந்த ஆட்டத்தில் நீக்கப்பட்ட கேதர் ஜாதவ் இந்த ஆட்டத்தில் இடம்பெறுவாரா என்பது தெரியவில்லை.
பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டாலும், தொடக்கம் மற்றும் கடைசி கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசாமல் ரன்களை விட்டுக்கொடுத்து விடுகிறார்கள். ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ ஆகியோரும் சோபிக்கவில்லை. இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் சென்னை அணி, தனது தவறுகளை திருத்தி வலுவாக களம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனாலும் சென்னை அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பி அசத்தும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
இன்று சென்னைக்கு எதிராக விளையாட இருக்கும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி ஏழு ஆட்டங்களில் விளையாடி மூன்று வெற்றி (டெல்லி, சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), நான்கு தோல்வி (பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் அணிகளிடம்) கண்டு ஆறு புள்ளிகள் பெற்று இருக்கிறது.
சென்னைக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் ஐதராபாத் அணி தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்யும். அதேநேரத்தில் முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் கண்டு இருந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்து வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
துபாயில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இன்றைய போட்டியைக் காண ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
**-ராஜ்**�,