�ஐபிஎல்: ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தைச் சாய்த்த சென்னை!

Published On:

| By Balaji

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று (ஏப்ரல் 28) இரவு டெல்லியில் நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14ஆவது ஐபிஎல் சீசனில் டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி ஹைதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 7 (5) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, மெதுவாக ரன்களைச் சேர்த்தது. இந்த ஜோடியில் மணிஷ் பாண்டே 35 பந்துகளில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். அவரை தொடர்ந்து டேவிட் வார்னரும் 50 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தநிலையில் 57 (55) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக மணிஷ் பாண்டேவும் 61(46) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடி காட்டிய கேன் வில்லியம்சன் 26 (10) ரன்களும், கேதர் ஜாதவ் 12 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி இரண்டு விக்கெட்டுகளும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை மளமளவென உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் மற்றும் டூ பிளஸ்சிஸ் தங்களது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினர்.

தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 75 (44) ரன்களில் ரஷித்கான் பந்து வீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 15 (8) ரன்களும், அடுத்ததாக டூ பிளஸ்சிஸ் 56 (38) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அதிரடியாக ரன் சேர்த்த சுரேஷ் ரெய்னா 17 (15) ரன்களும், ஜடேஜா 7 (6) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

**இன்று (ஏப்ரல் 29) இரண்டு ஆட்டங்கள்** நடைபெறுகின்றன. 3.30 மணிக்குத் தொடங்கும் **24ஆவது லீக் ஆட்டத்தில் மும்பையும் ராஜஸ்தானும்** மோதுகின்றன. 7.30 மணிக்கு தொடங்கும் **25ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லியும் கொல்கத்தா அணியும்** மோதுகின்றன.

**-ராஜ்**

.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share