ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் நேற்று (ஏப்ரல் 16) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது போட்டியில் பெங்களூரு – டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ததால் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ், அனுஜ் ராவத் களமிறங்கினர். அனுஜ் ராவத் ரன் எடுக்காமலும், டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த விராட் கோலி 12 ரன்களில் (ரன் அவுட்) விக்கெட்டை பறி கொடுத்தார்.
40 ரன்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்து பெங்களூரு அணி தடுமாறியது, ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். டெல்லி அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி பறக்கவிட்டார்.
சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார் முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் பறக்க விட்டார். மறுபுறம் ஷாபாஸ் அகமது தனது பங்குக்கு அதிரடியில் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்,
இதைத் தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – பிரித்வி ஷா களமிறங்கினர். சிறப்பாக விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். பின்னர் பிரித்வி ஷா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த மிட்செல் மார்ஷ், நிதானமாக ஆடினார். மறுபுறம் டேவிட் வார்னர் அதிரடி காட்டினார். 29 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சீரான இடைவெளியில் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
இதனால் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இன்று (ஏப்ரல் 17) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் 28ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 29ஆவது லீக் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.
**ராஜ்**
.