கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக நேற்று (ஏப்ரல் 18) நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 10ஆவது, 11ஆவது இரண்டு லீக் ஆட்டங்கள் நேற்று (ஏப்ரல் 18) ஒரே நாளில் நடைபெற்றன. முதலில் நடந்த 10ஆவது லீக் ஆட்டம் மாலை 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 5 ரன்னிலும் அடுத்து வந்த ராஜத் படிதார் ஒரு ரன்னிலும் வெளியேறினர். பெங்களூரு அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் அரை சதம் அடித்தார். ஸ்கோர் 11.1 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது தேவ்தத் படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இவரும் மேக்ஸ்வெல்லும் கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டி வில்லியர்ஸ் 27 பந்தில் அரை சதம் அடித்தார். அடுத்து வந்த ஜேமிசன் உடன் இணைந்து கடைசி மூன்று ஓவரில் துவம்சம் செய்துவிட்டார். 18ஆவது ஓவரில் 17 ரன்களும், 19ஆவது ஓவரில் 18 ரன்களும், கடைசி ஓவரில் 21 ரன்களும் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்தார்.
அடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.
அடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ராணா (18) மற்றும் கில் (21) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
திரிபாதி (25), மோர்கன் (29), கார்த்திக் (2), ஹசன் (26), ரஸ்செல் (31), கம்மின்ஸ் (6) ரன்கள் எடுத்து வெளியேறினர். ஹர்பஜன் சிங் (2) மற்றும் சக்ரவர்த்தி (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது.
இதனால், ஐபிஎல் போட்டியின் நேற்றைய 10ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொல்கத்தாவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று வெற்றிகளை ருசித்துள்ளது பெங்களூரூ அணி.
**-ராஜ்**�,