மும்பையில் நேற்று (ஏப்ரல் 22) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் படிக்கல், கோலியின் அபாரமான ஆட்டத்தால் ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். பட்லர் 8 ரன்னும், மனன் வோரா 7 ரன்னும், டேவிட் மில்லர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 21 ரன்னில் அவுட்டானார்.
சிவம் துபே 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டைப் பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, பெங்களூரு அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். தொடக்கம் முதலே தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினார். அவருக்கு கோலி பக்கபலமாக இருந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
படிக்கல் 51 பந்தில் சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதமடித்தார். அவர் 101 ரன்னுடனும், கோலி 72 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில், பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
நேற்றைய (ஏப்ரல் 22) ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் மொத்தம் 6,021 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.
அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5,448 ரன்களும், மூன்றாவது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ரன்களும், நான்காவது இடத்தில் டேவிட் வார்னர் 5,384 ரன்களும், ஐந்தாவது இடத்தில் ரோஹித் சர்மா 5,368 ரன்களும் எடுத்துள்ளனர்.
**இன்று (ஏப்ரல் 23) இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.**
**-ராஜ்**
.�,