b> ஆர்.அபிலாஷ்
நான் இதை எழுதும்போது சென்னை, மும்பை அணிகள் இந்த வருட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் தரைமட்டத்தில் இருக்கின்றன. முதல் நான்கு போட்டிகளையும் இவ்வணிகள் அவலமான முறையில் இழந்தன. மும்பை அணி வேறெந்த அணியைவிடவும் அதிகமான முறை அணியின் சேர்க்கையை மாற்றி விட்டது. சென்னை அணி தனது வீரர்கள் மீது முடிந்தளவுக்கு நம்பிக்கை வைத்தாலும் பந்து வீச்சில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து பார்த்தது. வியூகங்களை மாற்ற முயற்சி செய்தது. ஆனால், பிச்சைக்காரன் தட்டில் அதே செல்லாக்காசு மாறாமல் விழுவதைப் போல தோல்வியே திரும்பத் திரும்பக் கிடைக்கிறது. ஐபிஎல் ஆரம்பித்தது முதலே அதிக முறைகள் கோப்பையை வென்றுள்ள இந்த இரு ராட்சஸ பலம் பொருந்திய அணிகளுக்கு என்னவாயிற்று இம்முறை? இந்த சரிவுக்கான காரணங்கள் என்ன?
முதன்மையான காரணம் இம்முறை நடந்த ஏலம் – இவ்வருடம் புதிய இரு அணிகள் உள்ளே வந்தார்கள். குஜராத் மற்றும் லக்னோ. ஆகையால் ஏலத்தின் போது ஏற்கனவே இருந்த அணிகளில் இருந்த வீரர்களில் முக்கியமானவர்கள் அந்த அணிகளுக்குச் சென்றார்கள். பழைய அணிகளும் வலுவான அணிகளில் இருந்து ஏலத்துக்கு அனுமதிக்கப்பட்ட வீரர்களை வாங்கி தம் அணியில் சேர்த்துக் கொண்டனர். வலுவான அணிகளாக, தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக உருவாக வேண்டும் எனும் நோக்கம் புதிய அணிகளின் நிர்வாகங்களுக்கும், ஏலத்தைத் திட்டமிட்ட ஐபிஎல் நிர்வாகத்துக்கும் இருந்துள்ளது. அதனால்தான், குறைந்தபட்சம் சில வீரர்களை மட்டும் ஓர் அணி ஏலத்தில் தக்க வைக்க முடியும் எனும் விதியைக் கொண்டு வந்தனர். மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற அணிகள் முக்கியமான வீரர்களை இழந்தனர்.
ஏலத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படாத – அதாவது அணியின் மையமான வீரர்களை இழக்காத – பெரிய அணி என்றால் அது கொல்கத்தா மட்டுமே. டெல்லியையும் ஓரளவுக்குக் குறிப்பிடலாம். மேலும், டேவிட் வார்னரை வாங்கியதைத் தவிர அவர்களுடைய ஏலக் கொள்முதல் நன்றாக இருந்தது. எப்போதும் போல வலுவான சர்வதேச பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள், உள்ளூர் இளம் மட்டையாளர்கள் என ஒரு சிறப்பான ஸ்குவாடை டெல்லியினர் உருவாக்கினார்கள், ரிஷப் பந்த்தின் தலைமை வேறு உள்ளது. மாற்று அணிகளில் இருந்து வந்துள்ள அவர்களுடைய இளம் மட்டையாளர்கள் சாதிக்க வேண்டும் எனும் வெறியுடன் உள்ளார்கள்.
லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகளுக்கும், ராஜஸ்தானுக்கும் இதையே சொல்லலாம். ஒன்றிரண்டு வெளிநாட்டு மட்டையாளர்களைத் தவிர்த்தால் (மே.இந்திய தீவுகளின் ஹிட்டர்கள்) இந்த அணிகள் தமது துவக்க, மத்திய வரிசை ரன்களுக்கு இந்திய வீரர்களை சார்ந்துள்ளன; பந்து வீச்சுக்கும், ஆல்ரவுண்டர்களாகவும் நிறைய சர்வதேச வீரர்கள், ஒவ்வோர் இடத்துக்கும் நிபுணர்களாக கருதப்படுபவர்கள், அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். பஞ்சாப் அணி நிர்வாகம் ஆல்ரவுண்டர்கள் விஷயத்தில் – குறிப்பாக ஓடியன் ஸ்மித்தை வாங்குவதில் – அதிக ஆர்வம் காட்டினார்கள். இருந்தாலும் அவர்களுடைய அணி சமநிலை சிறப்பாக இல்லை. அனுபவமிக்க திறமையான அணித்தலைவரும் இல்லை (மயங்க் அகர்வால்). இது அவர்களைத் தொடர்ந்து சற்றே தடுமாற வைக்கிறது.
அடுத்து பெங்களூரு அணிக்கு வருவோம் – தலைமைப் பொறுப்பிலிருந்து கோலி ஓய்வு பெற்ற பிறகு அந்த அணி நிர்வாகம் விழித்துக்கொண்டு சிறப்பாகத் திட்டமிட்டு ஏலத்தில் தமக்குத் தேவையான வீரர்களை எடுத்திருக்கிறது. கடந்த வருடமே அவர்களுடைய பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்றாலும் இவ்வருடம் ஏ.பி. டிவில்லியர்ஸ் அணியில் இல்லை என்பதை உணர விடாதபடிக்கு அவர்கள் வலுவான மட்டையாளர்களை உள்ளே கொண்டு வந்தார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை வாங்கியது, பந்து வீச்சில் ஹேசல்வுட், சாஹல், கரண் ஷர்மாவை தேர்வு செய்தது, டூ பிளஸியில் ஒரு நல்ல அணித்தலைவரை கண்டடைந்தது ஆகியன பெங்களூரை ஒரு வலுவான அணியாக்கியது. சஹல் ராஜஸ்தானுக்குப் போய் விட்டாலும் அந்த இடத்தில் ஹசரங்காவைச் சிறப்பாகப் பயன்படுத்தி உள்ளார்கள். தேவைப்பட்டால் இரண்டு கால் சுழலர்களை அணியில் சேர்க்கவும் சாத்தியமுண்டு. மிக முக்கியமாக சென்னை அணியில் இருந்து டூபிளஸியை வாங்கித் தலைவராக்கியது மிகச்சிறந்த முடிவு. ஏனென்றால் டூபிளஸி ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியின் தலைவராகச் செயல்பட்ட அனுபவமிக்கவர், தலைமைத் திறனையும் நிரூபித்தவர். இங்கேதான் சென்னை அணி சொதப்பியது என்று சொல்லலாம்.
**சென்னை செய்த தவறு**
மகேந்திர சிங் தோனி அணித் தலைவராகத் தொடர்வார் என அவர்களுடைய நிர்வாகம் முரட்டுத்தனமாக நம்பியிருக்கக் கூடாது. என்னதான் கடந்த வருடமே அடுத்த தலைவர் என ஒரு மாற்று ஏற்பாடாக ஜடேஜாவை அவர்கள் தயாரித்திருந்தாலும் அது ஒரு சமயோசிதமான முடிவு அல்ல. ஏனென்றால், தோனி திடீரென தான் தலைமையில் இருந்து விலகுவதாக அறிவிக்க, அவரிடத்தில் வந்துள்ள ஜடேஜாவுக்குத் தலைமை அனுபவம் சுத்தமாக இல்லை. அவர் அணிக்குள் நன்றாகப் பேசியும் ஆளுமையாலும் தன்னை வெளிப்படுத்தும் திறன் பெற்றவரும் அல்ல. வரும் ஆண்டுகளில் அவர் அனுபவத்தால் மேம்படலாம் என்றாலும் தோனியைப் போன்ற ஒரு பெருந்தலைவர் விலகும்போது அவரிடத்தில் ஒரு எல்.கே.ஜி பையனை அமர்த்தினால் அது அணியின் நம்பிக்கையை, சமநிலையைக் குலைக்கும்.
நிர்வாகம் ஏலத்தில் எப்படியாவது டூபிளஸியை தக்க வைத்திருக்கலாம். ஆனால், அவரது வயது 37 என்பதால் அவரால் நீண்ட காலம் தலைவராக இருக்க இயலாது என சென்னை நினைத்திருந்தது என்றால் அது ஒரு தவறான பார்வையாகும். அடுத்த மூன்றாண்டுகள் அவர் தலைவராக ஆடினாலும் போதும், அதற்குள் ஒரு இளம் வீரரைத் துணைத்தலைவராக வைத்து வளர்த்தெடுக்கலாம் அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பே அஷ்வினை அணிக்குக் கொண்டுவந்து அடுத்த தலைவராக வளர்த்திருக்கலாம். தோனி தலைமையில் இருந்து விலகும்போது அஷ்வின் தயாராக இருந்திருப்பார். அஷ்வினின் தலைமைத் திறன் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது – டி.என்.பி.எல் தொடரில் அவர் சிறப்பாக தலைமை தாங்கியதைப் பார்த்தோம். சென்னை அணியின் அசட்டையான அணுகுமுறை, கண்மூடித்தனமாக தோனியை நம்பியிருந்தது அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது.
அடுத்தது, அணி சேர்க்கை. சென்னை அணியில் நல்ல இடது கை சுழலர்களை வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் மெதுவான, தாழ்வான பவுன்ஸ் கொண்ட சென்னை ஆடுதளத்தில் அவர்களால் சோபிக்க முடியும். பவர் பிளேவில் தீபக் சஹரும் சர்வதேச பந்து வீச்சாளர்களும் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தினாலும் மத்திய ஓவர்களை இந்த விரல் சுழலர்கள் பார்த்துக் கொள்வார்கள். சென்னை அணி வெற்றி மந்திரம் எதிரணியின் ரன்களைக் கட்டுப்படுத்தி, மட்டையாட்டத்தின் போது நிதானமாக ஆரம்பித்து மத்திய ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசுவது. அந்த ஸ்டைல் மும்பை, பூனே ஆடுதளங்களில் இம்முறை எடுபடவில்லை. ஏனென்றால் அங்கு தொடக்கத்தில் விக்கெட் எடுக்க வேகமிக்க வீச்சாளர்கள் வேண்டும். கால்சுழலர்களாலே இங்கு மத்திய ஓவர்களில் பவுன்ஸையும் சுழலையும் அதிகம் பெற்று விக்கெட்டுகளை எடுக்க முடியும். ஐபிஎல்லின் இந்த பருவத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள சுழலர்கள் யார்? சஹல், குல்தீப் போன்றோர் தானே. ராஜஸ்தான், குஜராத், லக்னோ என நன்றாக ஆடி வரும் அணிகளில் எல்லாம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துபவர்கள் கால்சுழலர்களே. அணிக்கு ஒரு கால்சுழலரையாவது வைத்திருக்கிறார்கள், ஆனால் சென்னை அணியில் ஒரு கால்சுழலர் கூட இல்லை.
துவக்க வீச்சாளரான தீபக் சஹரின் காயத்தினாலான விலகலைப் பற்றி, அது பந்து வீச்சின் கூர்மையைக் குறைத்துள்ளதைப் பற்றி பலரும் பேசுகிறார்கள், ஆனால், ஒரு வீரர் இல்லாதபோது ஓர் அணி நிலைகுலைகிறதென்றால் அந்த அணியின் ஸ்குவாடில் குறையிருக்கிறது, போதுமான தெரிவுகள் அவர்களிடம் இல்லை எனப் பொருள். முகேஷ் சவுதிரி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு போதுமான வேகமோ, அனுபவமோ இல்லை. ஹங்கர்கருக்கு இன்னும் ஏன் வாய்ப்பளிக்கவில்லை எனப் புரியவில்லை. பவர்பிளேயில் முதல் இரு வீச்சாளர்கள் வீசி முடித்ததும், அடுத்து வரும் ஓவர்களில் அணி முழுக்க ஆல்ரவுண்டர்களை சார்ந்திருப்பது மற்றொரு பலவீனம். நான்கு முழுநேர வீச்சாளர்கள், இரண்டு பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என்பதே சரியான சேர்க்கையாக இருக்கும்.
மூன்றாவதாக, வயதான வீரர்கள். இவர்களுக்குக் காலம் போகப் போக ஆட்டநிலையைத் தக்க வைப்பது, உடற்தகுதியை உச்சத்தில் வைப்பது சிரமமாகும் (அம்பத்தி ராயுடு நல்ல உதாரணம்).
நான்காவதாக, இது ஜடேஜாவின் அணி அல்ல. தோனிக்கான ஓர் அணியை ஜடேஜா எப்படிக் கையாள முடியும்? அதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜடேஜாவின் இலக்கை ஒட்டி ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும்.
ஐந்தாவதாக, சென்னை அணி தனது முதல் நான்கு மட்டையாளர்களையே எப்போதும் நம்பியிருக்கும் அணியாக உள்ளது. தொடக்க வரிசையில் உள்ள ருத்துராஜ், மோயின் அலி, ராயுடு ஆகியோர் ரன் அடிக்காதது அவர்களுடைய பின்வரிசை மட்டையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அணியுடைய நம்பிக்கையைக் குலைக்கிறது.
ஆறாவதாக, சென்னையைத் தவிர பிற ஆடுதளங்களிலும் ஆடும்படியான அணியை அவர்கள் உருவாக்கவில்லை.
சுருக்கமாக, தலைமை மாற்றத்துக்கு தயாராகாதது, அணியில் போதுமான ஆழமோ தெரிவுகளோ இல்லாதபடி ஏலத்தில் சொதப்பியது சென்னை அணியின் திணறலுக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது.
**மும்பை சொதப்பிய கதை**
மும்பை அணிக்கு வருவோம். முதலில், அவர்களுடைய ஸ்குவாடும் ஏதோ பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தைப் போல இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை அணி ஸ்குவாடு இவ்வளவு பலவீனமாகத் தெரிந்ததில்லை.
முதலில், நிர்வாகம் தவறாக ஏலத்தில் முதலீடு செய்தது அல்லது புது அணிகளின் வருகை இவர்களுடைய அணியின் வலிமையைக் குறைத்துள்ளது.
இரண்டாவதாக, டேனியல் சேம்ஸ், டிம் டேவிட், பிரெவிஸ் ஆகியோரின் தேர்வும் தவறானது. அவர்கள் இந்திய ஆடுதளங்களில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் அல்ல. அப்படி இருக்க சீனியர் வீரர்கள் குறைவாக உள்ள நிலையில் அவர்கள் மோசமாக ஆடி, ரன் அடிக்கும் அழுத்தத்தை முழுக்க மத்திய வரிசை போட்டிருக்கக் கூடாது. அதே போல ஒன்றிரண்டு வாய்ப்புகளுக்குப் பிறகு அவர்களை நீக்குவதும் தவறு. இது மும்பையின் மத்திய வரிசையை தெகிலான தகர டப்பாவைப் போலாக்கி விட்டது. சத்தம் மட்டுமே வருகிறது, ரன்கள் இல்லை. திலக் வர்மா மட்டுமே ஒரே சிறப்பான தேர்வு.
மூன்றாவதாக, டிம் டேவிட், சாம்ஸ் ஆகியோருடன் வேகவீச்சாளரான மெரடித்தின் தேர்விலும் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு நீளம், திசையில் போதுமான கட்டுப்பாடு இல்லை. இவர்களுக்காக செலவழித்த பணத்தை வலுவான இளம் இந்திய மட்டையாளர்களை எடுப்பதிலும் செலவிட்டிருக்க வேண்டும்.
நான்காவதாக, பொலார்டின் வயதும், உடற்தகுதி இன்மையும் அவரது பந்து வீச்சையும் மட்டையாட்டத்தையும் பாதிக்கிறது. ஆனால் அவரை நீக்கவும் துணிச்சல் இல்லை. அவர் அணியின் கழுத்தில் ஒரு கல்லைப் போல தொங்கிக் கொண்டிருக்கிறார்.
ஐந்தாவதாக, மத்திய ஓவர்களில் மார்கண்டே, முருகன் அஷ்வின் ஆகியோரை ரோஹித் ஷர்மா தொடர்ந்து ஆட வைத்திருக்க வேண்டும். முருகன் அஷ்வினுக்கு நான்கு ஓவர்களைக்கூட அவர் தொடர்ந்து வழங்காதது ஒரு முக்கிய தவறாகும். அதே போல, பொலார்டின் இடத்தில் பேபியன் ஆலன் நல்ல தேர்வாக இருந்திருப்பார். மெதுவான ஆடுதளங்களில் இவர்கள் அணியின் பந்து வீச்சை பலப்படுத்தி இருப்பார்கள்.
இப்போதைய நிலையில் ரோஹித் ஷர்மாவால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. அவர் தொடர்ந்து சதங்கள் அடித்தால் மட்டுமே மட்டையாட்ட வரிசை ஓரளவுக்கு சமாளிக்கும். தொடக்கத்தில் ரோஹித் ஜொலித்தால், கீழ்மத்திய வரிசையில் டிம் டேவிடாலும் நன்றாக ஆட முடியும். ஆனால் அப்போதும் பந்து வீச்சு பிரச்சனையாகவே இருக்கும். அதனால் பந்து வீச்சிலும் பாரித்த மாற்றங்கள் தேவை.
இந்த முறை, பழம் பெருச்சாளி அணிகளின் கப்பல்களில் ஏகப்பட்ட ஓட்டைகள். புதிய அணிகளின் ஆதிக்கம் ஐபிஎல்லின் நீரோட்டத்தை மாற்றும் வகையில் இருக்கப் போகிறது!
*