�இடியாப்ப சிக்கலில் இந்தியன்-2 மெளனம் காக்கும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள்

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு என்று ஐந்து சங்கங்கள் இருக்கிறது. இந்த சங்கங்களால், தமிழ் சினிமாவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்ன பயன் என்கிற கேள்வி பலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நடக்கும் அத்துமீறல்கள், அரசு அதிகாரிகளின் செயல்படா நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் தாமாகவே முன் வந்து வழக்கு பதிந்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் நாளிதழ்களில் கலர்புல் விளம்பரங்கள் கொடுத்ததுடன், தமிழ்நாடு முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாதவர்கள் அவரது மகனும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தங்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் முடங்கி கிடக்கும் தமிழ் சினிமாவின் நெருக்கடியை களைய என்ன செய்வது என்பதைப் பற்றி எந்த முயற்சியையும் தயாரிப்பாளர்களுக்கு என்று இருக்கும் சங்கங்கள் விவாதிக்க தொடங்கவில்லை.

தமிழ் சினிமாவில் அதிக முதலீட்டில் தயாரிக்கப்பட்டு வரும் படங்களில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் படமும் ஒன்று. கொரோனா பொது முடக்கம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத வகையில் முடக்கிவிட்டது.

இயக்குநர் ஷங்கர் வழக்கம் போல தயாரிப்பாளர் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன என புதிய படங்களை இயக்குவதற்கான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அறிவிக்க தொடங்கியபோது தயாரிப்பு நிறுவனமான லைகா நீதிமன்ற கதவுகளை தட்டியது.

இயக்குநர் ஷங்கர் 1993 முதல் இன்றுவரை 9 தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் 13 படங்களை இயக்கி உள்ளார். இவற்றில் ஷங்கர் படம் இயக்கிய நிறுவனங்களில் ஏழு தற்போது படங்கள் தயாரிப்பது இல்லை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஷங்கர்.

இவரிடம் இருந்து மீண்டு வெற்றிகரமான தயாரிப்பாளராக இருப்பது சன்பிக்சர்ஸ் மட்டுமே.

ஷங்கர் இயக்கத்தில் இனி தமிழில் படம் தயாரிக்க மாட்டார்கள் என்கிற நிலையில் அவருக்கு ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை இயக்கும் வாய்ப்பு வழங்கியது, அதன்மூலம் நஷ்டமடைந்தாலும் மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கிய லைகா நிறுவனம் ஷங்கரின் நடவடிக்கைகளால் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.

இந்தியன்-2 படம் மட்டுமல்ல பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கொரோனா முடக்கத்தால் வெளியிட முடியாத அல்லது பணிகள் முடிக்கப்படாத படங்கள் அனைத்தும் வியாபாரம் மூலம் முதலீட்டை மீண்டும் எடுக்க முடியுமா என்கிற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லைகா-இயக்குநர் ஷங்கர் இரு தரப்புக்கு இடையில் எழுந்துள்ள பஞ்சாயத்து நீதிமன்றம் வரை சென்று அங்கும் ஒரு இறுதி முடிவு எடுக்கப்படாத நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்து விட்டார்.

இதை எதிர்த்து லைகா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, ஐதராபாத் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக லைகா நிறுவனத்தின் மீது புகார் கூறினார்.

மேலும், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளிவைக்க லைகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள தடை கோரிய மனு மீது தீர்வு கண்ட பின், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என்று கூறி, இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு, மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

**-இராமானுஜம்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share