அயர்லாந்து செல்லும் இந்திய அணியில் யார், யார்?

entertainment

இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா போட்டிகளைத் தொடர்ந்து இந்திய அணி வருகிற 24ஆம் தேதி அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது. இந்த அணியில் இடம்பெறுபவர்கள் யார், யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியில் 48 ரன்களிலும், நான்காவது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. தொடரை நிர்ணயம் செய்வதற்கான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன.
இந்த நிலையில் இந்திய அணி அடுத்து அயர்லாந்துக்கு சென்று இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வருகிற 24ஆம் தேதி அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது.
முதல் போட்டி 26ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 28ஆம் தேதியும் டூப்ளின் நகரில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்வதில் இந்த தொடர் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்திய அணியினரின் விளையாட்டு திறனை நேரில் பார்வையிடுவதற்காக தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீரருமான சேட்டன் சர்மாவும் இந்திய வீரர்களோடு செல்கிறார்.
தென்னாப்பிரிக்க தொடரில் ஆடிய ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்த தொடரில் ஆடவில்லை. காயத்தில் இருந்து குணமடையாததால் லோகேஷ் ராகுலும் ஆடவில்லை. இதனால் அயர்லாந்து பயணத்துக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் விளையாடும் ஒரே புதுமுக வீரர் ராகுல் திரிபாதி ஆவார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 ஓவர் தொடரில் விளையாடும் இந்திய அணியினர்… ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், உம்ரான் மாலிக்.
இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்த ராகுல் திவேதியா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
“திவேதியா, சிறந்த வீரர். சில சமயங்களில் 15 பேருக்குப் பதிலாக கூடுதலான வீரர்களை அழைத்துச் செல்லலாம். ஒரு கூடுதல் வீரர்களை சேர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வீரர்களை அணியில் சேர்க்காமல் இருப்பது கடினமான முடிவு. ஐபிஎல்லில் தோல்வியின் பிடியில் இருந்த போட்டிகளில்கூட திவேதியா வெற்றியைத் தேடி தந்துள்ளார். அந்த மாதிரியான சுபாவத்தைக் காட்டுபவர்களை 16ஆவது நபராக அயர்லாந்துக்கு அழைத்துச் செல்லலாம். இன்னும் சற்று கடினமாக அவர் உழைத்தால் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெறலாம்” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

**ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.