ஒரு படத்தை இயக்கக் குறைந்தது இரண்டு வருடமாவது எடுத்துக் கொள்பவர் இயக்குநர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குநரையே அசைத்துப் பார்த்துவிட்டது ‘இந்தியன் 2’. நீண்ட நாளாகத் தயாரிப்புப் பணிகளில் இருக்கும், இப்படம் எப்போது முடியும் என்பது தெரியாமல் இருந்துவருகிறது. கடந்த வருட பிப்ரவரியில் நடந்த பெரும் விபத்துக் காரணமாக நின்றுபோன படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஷங்கரின் அடுத்தப் படம் குறித்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் அடுத்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நடிக்க இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராம் சரண் நடிக்க பல மொழிகளில் இந்திய சினிமாவாக உருவாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் ஒரு தகவல். தெலுங்கில் வெங்கடேஷ்வரா கிரியேஷன் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் தில் ராஜூ என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு ஸ்கிரிப்ட் ஒன்றை ராம் சரணுக்கு கூறியிருக்கிறார் ஷங்கர். ஹிஸ்டாரிக்கல் டிராமாவாக இந்தக் கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ராம்சரணின் 15வது படமாக இது உருவாக இருக்காம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், ஆரம்பத்தில் இந்தியன் 2 படத்தை தில் ராஜூ தான் தயாரிக்க இருந்தார். அது கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியன் 2வின் நிலை? கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துவரும் இந்தியன் 2 படத்திற்கான 60% ஷூட்டிங்கை முடித்துவிட்டார் ஷங்கர். தேர்தல் பணியில் கமல்ஹாசன் இருப்பதால், தேர்தல் முடிந்ததும் கமலுக்கான காட்சிகள் படமாக்க இருக்கிறாராம். அதோடு, ஏப்ரலில் சித்தார்த் உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கானக் காட்சிகள் படமாக்கவும் திட்டமாம். அனிருத் இசையில் உருவாகிவரும் இப்படம், எப்படியும் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்துவிடும். அதோடு, இந்தப் படத்தை முடித்தப் பிறகு தான், ராம் சரண் படம் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
அதுபோல, ராம் சரணுக்கு ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடிக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ படம் தயாராகிவருகிறது. பிரம்மாண்ட திரைப்படமாக, இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, ஷங்கர் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
– தீரன்�,