வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கட்டாக்கிலுள்ள பராபதி ஸ்டேடியத்தில் மோதி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
கட்டாக் மாதிரியான பேட்டிங் பிட்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் அடித்தது பெரிய விஷயம் இல்லை என்றாலும், முதல் 10 ஓவர்களுக்கு 40 ரன்கள், 20 ஓவர்களுக்கு 70 ரன்கள், 30 ஓவர்களுக்கு 137 ரன்கள் என வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை, இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தியது இந்தியாவுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்ததும், இந்திய மைதானத்தில் பழம் தின்று கொட்டை போட்ட பொல்லர்டு மாதிரியான சீனியர் பேட்ஸ்மேன் கொடுக்கும் அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் அவரை 74 ரன்கள் வரை எடுக்கவிட்டது, இந்திய பவுலர்களிடம் சரிபார்க்க வேண்டிய சில தவறுகளைக் கண்முன்னே நிறுத்தியது. இது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஓவர் டைம் உழைக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியது.
“என்னால் சரியாக விளையாட முடியவில்லை என்றாலும், கோலி மற்றும் ராகுல் விளையாடியது மகிழ்ச்சியைக் கொடுத்தது” என்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய ரோகித் ஷர்மா கூறியதில் அர்த்தம் இருந்தது. இதையே தான் கோலியும் “எனக்குத் தேவையாக இருந்ததெல்லாம் சிறிய பார்ட்னர்ஷிப் மட்டும்தான். ராகுல் வெளியேறிவிட்டபிறகு, ஜடேஜாவின் ஆட்டத்தில் அந்த நம்பிக்கை கிடைத்ததும் ரன்கள் மளமளவென ஏறின” என்று அவர் ஸ்டைலில் கூறினார்.
கோலி – ராகுல் பார்ட்னர்ஷிப் மூலம், ரன்கள் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தும் நம்பிக்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் போய்விட்டதை ஃபீல்டிங் செட் செய்ததிலிருந்தே அறிய முடிந்தது. பவுண்டரிக்கு அருகில் ஆட்களை நிறுத்தாமல், மிட் ரேஞ்சிலேயே வெஸ்ட் இண்டீஸ் பிளேயர்கள் நின்றது ஓர் அழுத்தத்தைக் கொடுத்தாலும், நேர்த்தியான ஷாட்களின் மூலம் கோலி – ராகுல் ஜோடி அதை முறியடித்தன. அதன் பிறகு ஜடேஜாவுடன் கூட்டணி சேர்ந்த கோலி, தனது ஆட்டத்தைத் தடுப்பாட்டத்துக்கு மாற்றி, ஜடேஜாவை விளையாட வைத்தார். இருவருக்குமான வியூகத்தை வெஸ்ட் இண்டீஸ் பிளேயர்கள் அமைக்கும் முன்பாக இந்திய அணி நம்பிக்கைக்குரிய ஸ்கோரை எட்டியிருந்தது. இனி கவலையில்லை என ரசிகர்கள் சீட்டில் அமர்ந்தபோது, இன்ஸைட் எட்ஜ் பந்தில் விக்கெட்டை இழந்தார் கோலி.
முழு நேர பவுலர்களாக இருந்தாலும் ஜடேஜா – ஷ்ரதுல் தாக்கூர் முகங்களில் ஒரு நம்பிக்கை இருந்தது. ‘தேவையற்ற ஷாட்களில் விக்கெட்டை இழக்கக் கூடாது’ என்ற நோக்கத்தில் ஜடேஜாவும், ‘நமது பேட்டிங் திறமையைக் காட்ட கிடைத்த நல்ல வாய்ப்பு’ என்ற உத்வேகத்தில் தாக்கூரும் விளையாடிய ஆட்டம், பந்தைப் பறக்கவிட்டதோ இல்லையோ ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை எகிறவிட்டது.
அதிலும் முக்கியமாக ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த சமயத்தில், தாக்கூர் செய்த செயலால் ரசிகர்கள் ஆஆஆஆஆ…வென கத்தத் தொடங்கி, ஓஓஓ…வென முடித்தனர். 49ஆவது ஓவரின் முதல் பந்தை விளையாடிய ஜடேஜா, நேராக வந்த பந்தை மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டார். அந்தப் பந்து நேராக ஃபீல்டரிடம் செல்வதைப் பார்க்காமல் தாக்கூர் பாதி பிட்ச் வரை ஓடிவிட்டார். ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பாத ஜடேஜா ஓடிவர மறுக்க, தாக்கூர் திரும்ப ஓடத் தொடங்கினார். பொல்லாத காலம், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தாக்கூர் கீழே விழுந்தார். பிட்ச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த நாடகத்தைப் பார்த்த படபடப்பில் ஃபீல்டர் பந்தை சரியாகப் பிடிக்காததால் தாக்கூர் எழுந்து திரும்ப, தனது இடத்துக்கு ஓடிவர நேரம் கிடைத்தது. இல்லையென்றால், அத்தியாவசியமான சமயத்தில் விக்கெட்டை இழந்து இந்திய அணி தவித்திருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டர்களின் சொதப்பலைப் பெரிதாக்க அதன் கேப்டன் பொல்லார்டு விரும்பவில்லை. ‘மிகச் சிறந்த ஆட்டத்தை விளையாட வேண்டிய அழுத்தத்தை இந்திய அணி கொடுத்தது. அதனால்தான் அவர்கள் நம்பர் ஒன் பொசிஷனில் இருக்கின்றனர். என் பசங்களும் சாதாரணமாக விட்டுவிடவில்லை. உலகத் தரமான கிரிக்கெட்டை விளையாடி இந்திய அணிக்கு இவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்திருக்கின்றனர். இது நல்ல திறமைகள் எதிர்காலத்தில் வெளிப்படும் என்பதற்கான அடையாளம். இந்த சீரீஸ் தோல்வி எங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அனைவருக்கும் நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. அதோடு, ஐபிஎல் ஏலத்திலும் நல்ல விலை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணமாக அமைந்த இந்த சீரீஸ் எங்களுக்குச் சிறப்பானது” என்று கூறி தனது சிரிப்பை உதிர்த்தார் பொல்லார்டு.
ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் தொடர்ந்து பயணித்து வரும் இந்திய அணி, 300 ரன்களுக்கு மேல் அடித்த அணிகளின் பட்டியலிலும் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு ஐபிஎல் ஏலம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இரு அணிகளும் சிறந்த கிரிக்கெட் போட்டியைக் கொடுத்ததால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கிரிக்கெட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சேர்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக இந்தியாவின் 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன.�,”