தொடர் வெற்றி… டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இந்தியா!

entertainment

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தத் தொடர் வெற்றியின் காரணமாக ஐசிசி டி20 தரவரிசையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று (பிப்ரவரி 20) இரவு நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்வாட் 4 ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இஷான் கிஷன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் (25), நடுவரிசையில் இறங்கிய கேப்டன் ரோஹித் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து சூரியகுமார் யாதவும், வெங்கடேஷ் அய்யரும் இணைந்து அதிரடியுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக சூரியகுமார் யாதவ் 7 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். வெங்கடேஷ் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் டொமினிக் டிரேக்ஸ், ஹேடன் வால்ஷ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் களமிறக்கினர். இந்த ஜோடியில் மேயர்ஸ் 6 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிகோலஸ் பூரனுடன் ரோவன் பவல் ஜோடி சேர்ந்தார்.
பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பவல் 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்டு 5 ரன்களும், ஹோல்டர் 2 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 12 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 61 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ரொமாரியோ ஷேப்பர்டு 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிரேக்ஸ் 4 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் பேபியன் ஆலன் 5 ரன்களும், ஹெய்டன் வால்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்றது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் பட்டேல் மூன்று விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியைப் பறித்த இந்திய அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
டி20 கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த ஒன்பதாவது வெற்றி இதுவாகும்.
இந்த நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதன்படி 269 ரேட்டிங் புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து அணியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. ஏற்கனவே 2016 பிப்ரவரி 12 முதல் மே 3 வரை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *