Oஇந்திய அணியின் மோசமான தோல்வி!

Published On:

| By Balaji

நான்காவது நாளில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களும், நியூசிலாந்து அணி 235 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குவது, முதல் டெஸ்ட் போட்டியைக் காட்டிலும் நல்ல முன்னேற்றத்தை இந்திய அணியின் தரப்பில் காட்டியது. ஆனால், மூன்றாம் நாளில் அந்த மகிழ்ச்சியை உடைத்தது இந்திய அணி. டாப் ஆர்டரில் சொதப்பியதாலும், பேக்-அப் பிளானாக மிடில் ஆர்டரில் யாரும் இல்லாததாலும் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தை முடித்தது இந்திய அணி. நான்காவது நாளில் எஞ்சியிருக்கும் 4 விக்கெட்டுகளில் ஏதாவது மாயாஜாலம் நடைபெற்றால் மட்டுமே இந்திய அணியைக் காப்பாற்றமுடியும் என்ற நிலை இருந்தபோது ரசிகர்களை அதிகம் சோதிக்காமல், சட் சட்டென்று விக்கெட்டுகளை பறி கொடுத்து 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்திய அணி.

நான்காவது நாளில் 34 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்ததால் அணியின் ஸ்கோர் 124 எட்டியிருந்தது. ஏற்கனவே இருந்த முன்னிலையான 7 ரன்களுடன் சேர்த்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டாம் லாதம்-டாம் புளுண்டெல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டாம் ஜோடி ஒன்று சேர்ந்து 103 ரன்களை எடுத்தது. இருவரும் அரைசதம் எடுத்துவிட்ட பிறகு டாம் லாதம் விக்கெட்டை உமேஷ் யாதவ் எடுத்தார். மீதமிருக்கும் இரண்டு நாட்கள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுக்கவேண்டிய வலுவான நிலைக்கு ஆளானது நியூசிலாந்து அணி. எனவே, விக்கெட்டுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பவுண்டரிகளாக அடித்து நியூசிலாந்து அணி வெற்றியைப் பெற்றது.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share