4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி!

Published On:

| By Balaji

தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. ஒருநாள் போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று (ஜனவரி 23) நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் சாஹர், ஜயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

குயிண்டான் டி காக், மலான் அகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மலான் ஒரு ரன் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெம்பா பவுமா 8 ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேறினார். ஒருபக்கம் இரண்டு விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் டி காக் அதிரடியாக விளையாடினார்.

அவருக்கு துணையாக விளையாடிய மார்கிராம் 15 ரன்கள் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் வெளியேறினார். அடுத்து டி காக் உடன் வான் டெர் டஸ்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென்னாப்பிரிக்கா 35.4 ஓவரில் 214 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். டி காக் 130 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வான் டெர் டஸ்சன் 59 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் சற்று குறைய ஆரம்பித்தது. டேவிட் மில்லர் ஒருபக்கம் நிலைத்து நின்று விளையாடி மறுமுனையில் பெலுக்வாயோ (4), பிரிட்டோரியஸ் (24), மகாராஜ் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் 38 பந்தில் 39 ரன்கள் எடுத்து வெளியேற, தென்னாப்பிரிக்கா 49.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளும் தீபக் சாஹர், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 9 ரன்களிலும், தவான் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். கோலி 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இந்திய அணியை கடைசி கட்டத்தில் தீபக் சாகர் அரை சதம் அடித்து ஆட்டத்தை திசை திருப்பினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக்கு அருகேதான் கொண்டு செல்லவே முடிந்தது.

பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என நம்பிக்கையை தீபக் சாகரின் ஆட்டம் அமைந்தது. அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸருடன் 54 ரன்களைக் குவித்தார். இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற அவர் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி அதற்குள் விக்கெட்டைப் பறிகொடுத்து ஆல் அவுட் ஆனது. கடைசி கட்டத்தில் தான் அவுட் ஆன நிலையில், இந்திய அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத தீபக் சாகர் கண்கலங்கி விட்டார். அவர் மட்டுமல்ல… இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதும் கலங்கிவிட்டன.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share