இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

Published On:

| By Balaji

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிப்பட்ட நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புனேயில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன.

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதனால், ரசிகர்கள் இன்றி நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்பட்டது. போட்டி நடத்தப்படும் இடத்தை மும்பைக்கு மாற்றலாம் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில், புனேயில் மூன்று ஒருநாள் போட்டிகளையும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர் சந்திப்புக்குப் பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தற்போதைய தீவிரத்தை கவனத்தில்கொண்டு, முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

இதனால் புனேயில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share