ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவையாக உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அஜிங்யா ரஹானே (5 ரன்), புஜாரா (9 ரன்) களத்தில் இருந்தனர்.
மூன்றாவது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதன்பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து மொத்தம் 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. லபுஸ்சேன் 47 ரன்களுடனும், சுமித் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று (ஜனவரி 10) நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. அதில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 87 ஒவர்களில் 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சைனி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கேப்டன் பெயின் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணிக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக ஆடி ரன் சேர்த்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 31 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஒவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 98 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் புஜாரா 9 ரன்களும், கேப்டன் ரகானே 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நாளை (ஜனவரி 11) ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை விட 309 ரன்கள் பின் தங்கி உள்ளது. இந்திய அணி 309 ரன்கள் எடுத்தால் வெற்றியை ருசிக்கும் வாய்ப்புள்ளது.
**-ராஜ்**�,