இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 தொடர்களை வென்ற இந்திய அணி, நேற்று (மார்ச் 28) இரவு நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்தன. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (மார்ச் 28) பகல் இரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 78 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும், ரோகித் சர்மா 37 ரன்களும், ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து 330 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்னிலும் வெளியேறினர். இந்த இரு விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். அதன் பின்னர் பென் ஸ்டோக்ஸ் – டேவிட் மாலன் ஜோடி நிதானமாக விளையாடியது. பென் ஸ்டோக்ஸ் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 35 ரன்களில் தவானிடம் கேட்ச் ஆனார்.
இதனால் இங்கிலாந்து அணி 11 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்து திணறியது. அதன் பின்னர் விளையாடிய டேவிட் மலான் 6 பவுண்டரிகளுடன் அரை சதம் (50) விளாசினார். பட்லர் (15), லிவிங்ஸ்டன் (36), மொயீன் அலி (29) மற்றும் ரஷீத் (19) ரன்களில் ஆட்டமிழந்தனர். மார்க் வுட் 14 ரன்களில் ரன் அவுட்டானார். ஆனால், சாம் கர்ரன் அதிரடியாக விளையாடி 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசினார். 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேபோன்று ரீசி டாப்ளே (1) ரன்கள் எடுத்தார்.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
**-ராஜ்**
.�,