இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷர்துல் தாக்குர் 57 ரன்னும், விராட் கோலி 50 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் நான்கு விக்கெட்டுகள், ராபின்சன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (செப்டம்பர் 3) நடந்தது. மலான் 31 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 37 ரன்னும், மொயீன் அலி 35 ரன்னும் எடுத்தனர்.
ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 81 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளும், பும்ரா, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும், ஷர்துல் தாகுர், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது.
**-ராஜ்**
.�,