அதிகரித்த எதிர்ப்பு: பெற்று தந்த வெற்றியும் – உயர்ந்த சம்பளமும்!

Published On:

| By Balaji

திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தரப்பில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை காட்டிலும் அந்த படம் சர்ச்சைக்குரிய படமாக உருமாறுகிறபோது ஊடகங்கள் மூலம் கிடைக்கின்ற விளம்பர வெளிச்சம் அபாரமாக இருக்கும்.

இவ்வாறான சூழல் ஏற்படுகிற போது, அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்கிற கேள்வியும், விவாதமும் பொதுஜனங்கள் மத்தியில் ஏற்படுகிறபோது கடைக்கோடி குக்கிராமம் வரை அப்படம் பற்றிய செய்தி செலவு இல்லாமல் சென்றடைந்து விடுகிறது.

அப்படி ஒரு விளம்பரம் சமீபத்தில் தி பேமிலிமேன் – 2 வெப் தொடருக்கு தமிழீழ ஆதரவாளர்களால் கிடைத்தது. அதன் விளைவாக அதிகப்படியான இந்திய மொழிகளில் வெளியாகி பார்க்கப்பட்ட தொடர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது தி பேமிலி மேன்-2 வெப் தொடர்.

இந்த எதிர்பாராத வெற்றியினால் நடிகை சமந்தாவின் சம்பளமும் உயர்ந்துள்ளது. அடுத்துத் தான் நடிக்கவிருக்கும் புதிய வெப் தொடருக்கு எட்டுகோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறாராம் சமந்தா.

அதிகப்படியான இந்திய மொழிகளில் பார்க்கப்பட்ட வெப் தொடரில் நடித்த முதல் நடிகை என்ற பெயரையும் சமந்தா தி பேமிலி மேன் வெப் தொடர் மூலமாகப் பெற்றுள்ளார்.

இந்தத் தொடர் விடுதலைப் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியதாக கூறப்பட்டாலும் சமந்தாவின் பெண் விடுதலைப் புலி நடிப்பு தனித்துவமானது என்கிறார்கள் வெப் தொடர் பார்க்கும் பார்வையாளர்கள்.

தற்போது சமந்தா தெலுங்கில் மகாகவி காளிதாஸரின் காவியமான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் ஈஸா ரெப்பாவும், மலையாள நடிகர் தேவ் மோகனும் நடிக்கிறார்கள். ருத்ரமா தேவி தெலுங்கு படத்தை இயக்கிய குணசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தி பேமிலி மேன்-2 வெப் தொடரில் நடித்ததால் சமந்தாவை இனிமேல் தமிழில் நடிக்க வைக்க வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சமந்தா காத்துல வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம் வெளியிட தயாராகவே உள்ளது.

இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சமந்தா சென்னைக்கு வந்தால் அவருக்கு எதிரான போராட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

**-இராமானுஜம்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share