விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் நினைத்ததை விட வெற்றிகரமான வசூல் சாதனைப் படைத்துவருகிறது.
அடுத்ததாக, விஜய் நடிக்க இருக்கும் 65வது படமான ‘விஜய் 65’ படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன். சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே, விஜய்யை இயக்க தயாராகிவருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்துக்கான முதல் கட்டப் பணிகள் துவங்கியிருக்கிறதாம். நடிக நடிகையர்கள் தேர்வு, தொழில் நுட்பக் கலைஞர்களை உறுதி செய்யும் பணிகள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அல்லு அர்ஜூன் நடித்த ‘அல வைகுண்டபுரமுலோ’ படத்தில் நாயாகியாக நடித்தவர் என்பது கூடுதல் தகவல்.
அடுத்து, விஜய்க்கு வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதாம். இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக அருண்விஜய் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி திடீரென பரவ துவங்கியிருக்கிறது.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். அதனால், விஜய்யின் அடுத்தப் படத்திலும் ஒரு பெரிய ஹீரோவை வில்லனாக்க நெல்சன் விரும்புகிறாரா என்பது தெரியவில்லை. இதே நேரத்தில், அஜித்துக்கு வில்லனாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்தார் அருண்விஜய். அப்போது, அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. அதனால், வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டார். இப்போது, பல பெரிய பட்ஜெட் படங்களை கைவசம் வைத்திருக்கும் அருண்விஜய், வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவிப்பது சந்தேகமே என்கிறார்கள்.
இதுகுறித்து, அருண்விஜய் தரப்பில் விசாரித்தால், விஜய் 65 டீமிலிருந்து யாரும் இதுகுறித்து பேசவே இல்லை என்கிறார்கள். எப்படி இந்த செய்தி பரவியதென்பதும் தெரியவில்லையாம். அதோடு, அப்படி அணுகினாலும், அருண்விஜய் நடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
சென்ற வருடம் அருண் விஜய் நடிப்பில் மாஃபியா ரிலீஸ் ஆனது. இப்போது அவர் நடிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் `சினம்’ படம் ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. அடுத்ததாக, அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் விஜய் – ஹரி காம்போவில் உருவாகும் படம், விவேக் இயக்கத்தில் பாக்ஸர், நவீன் இயக்கத்தில் `அக்னி சிறகுகள்’ படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.
**ஆதினி**�,