இம்சை அரசன் 24ஆம் புலிகேசி: சிக்னல் கொடுத்த வடிவேலு

Published On:

| By Balaji

தமிழ் ரசிகர்களின் சிரிப்பு வெடியாக திரையுலகில் வலம் வந்தவர் வடிவேலு. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த கலைஞன். ஹீரோவுக்கு இணையான உச்சங்களைத் தொட்டவர், தற்பொழுது சினிமாவிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறார்.

வருடத்திற்கு ஐந்து – பத்து படங்களுக்கு மேல் பிஸியாக இருந்தவர், இப்போது பட வாய்ப்புகளே இல்லாமல் அல்லாடி வருகிறார். இறுதியாக, 2017ல் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். அதன்பிறகு, வடிவேலு நடிக்க எந்த படமும் வெளியாகவில்லை.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து பெரிய ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முன்வந்தார் ஷங்கர். படமும் துவங்கியது. ஆனால், சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் நடுவே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதோடு, கதையில் எக்கச்சக்க மாற்றங்களையும் வடிவேலு கூறியதாகச் சொல்லப்பட்டது. அதனால், பெரும் பொருட்செலவில் தயாரான படத்தின் படப்பிடிப்புக்கு வடிவேலு வரவில்லை. அதோடு, படமும் அப்படியே நின்றது. இதனால், சங்கத்தின் உதவியை நாடினார் ஷங்கர். அதன்படி, வடிவேலுவுக்கு ‘ரெட்கார்டு’ போடப்பட்டது. அரசியல், படத்தில் சிக்கல் என தொடர் பிரச்னையால் எந்தப் பட வாய்ப்பும் வடிவேலுவுக்கு கிடைக்காமல் போனது.

சிக்கலால் சிக்கித் தவிக்கும் படங்களின் பிரச்னையைத் தீர்வுக்குக் கொண்டுவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தீர்க்க முடியாத சிக்கலை சரி செய்து ‘எனைநோக்கிப் பாயும் தோட்டா’ படத்தை ரிலீஸ் செய்தவர். தற்பொழுது, இம்சை அரசன் 24ஆம் புலிகேசியை தட்டிப் பார்த்து டிங்கரிங் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.

வடிவேலு மற்றும் ஷங்கர் இரண்டு தரப்புகளிலும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார் ஐசரி. இரண்டாம் பாகத்தை ஷங்கரும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. தற்பொழுது, லைகா நிறுவனத்துடன் பெரும் மோதலில் இருக்கிறார் ஷங்கர். அதனால், படத்தை டேக் ஓவர் செய்து அடுத்தக் கட்டத்துக்குப் படத்தை நகர்த்தவும் யோசித்துவருகிறார் ஐசரி.

சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த வடிவேலு, சமீப காலமாக திரையுலக வட்டாரத்தினர் ஏரியாக்களில் அடிக்கடி தென்படுவதாகவும் ஒரு தகவல். வடிவேலுவும் சில விஷயங்களில் இறங்கிவந்து, நடிக்க சம்மதம் சொல்லியதாகவும் சொல்கிறார்கள்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் சிம்புதேவன். தொடர்ந்து, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணியும், புலி படங்களைக் கொடுத்தவர். தற்பொழுது, வெங்கட்பிரபு தயாரிப்பில் ‘கசட தபற’ எனும் ஆறு கதைகள் கொண்ட படமொன்றை இயக்கியிருக்கிறார். அந்தப் படம் ரிலீஸூக்குத் தயாராகிவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, வடிவேலு படம் மீண்டும் துவங்கும் என்கிறார்கள்.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share