அமெரிக்காவில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவில், பிரசித்தி பெற்ற இசைக் கலைஞர்களுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் இரு பியானோக்களில் இருவிதமான பாடல்களை வாசித்து அப்போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச கவனம் பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம்.
இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்தை சர்வதேச கலைஞர்கள் முதல் அவரது குருவான ஏ.ஆர்.ரஹ்மான் வரை பலரும் பாராட்டியுள்ளனர். தற்போது லிடியன் வீட்டில் இருந்து கொண்டே இளையராஜா இசையமைத்த பாடல்கள், திருவாசகம் உள்ளிட்டவற்றைத் தனது குடும்பத்தினருடன் மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இந்த ஊரடங்கு காலத்திலும் தன் இசைப்பணியை விடாமல் செய்து வரும் லிடியனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் லிடியனின் இசைப் பணியை இளையராஜாவும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக லிடியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவுக்காக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா வீடியோ கால் செய்து பாராட்டினார். இது உண்மையிலேயே எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆசீர்வாதம்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லிடியனின் அப்பா வர்ஷன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “கடந்த 25 ஆண்டுகளாக என் வாழ்க்கையை இசைஞானி இளையராஜாவின் இசைக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒவ்வொரு பொழுதும் அவருடைய இசையைப் பழகியும், பாடல்களைப் பாடியும் இன்பத்தில் திளைத்தேன்.
இன்று 25 ஆண்டுகளின் தவத்தின் பயனை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அடைந்தேன் . ஆம், அந்த இசைஞானியிடம் இருந்து வந்த அழைப்பு என்னை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது. நான் திகைத்துப்போனேன்! அவர் என் குழந்தையின் இசைப் பயணத்தைப் பாராட்டவே அழைத்தார். அவர் எங்களை நேராகத் தொடர்புகொள்ளத் தேவையே இல்லை. ஆனாலும் அதைச் செய்தாரே! அந்த அழைப்பில் தாய் போன்ற அவர் பாசத்தையும் குழந்தை போன்ற அவரது சிரிப்பையும் கண்டேன்!
இசையால் மட்டுமா இவர் ஞானி? அல்ல! அதையும் தாண்டி பாசத்தைக் காட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரே என்பதை உளமார உணர்ந்தேன். எனது உள்ளச்சிறகை விரிக்கவும் பறக்கவும் செய்துவிட்டார் இசைஞானி. தரிசனம் கிடைத்தது, பயனும் அடைந்தது” என நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார் வர்ஷன்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”