தமிழ் சினிமாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உச்சத்தில் இருந்தபோது 1976ல் ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார் இளையராஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர்.
இந்த சாதனையை எதிர்வரும் காலங்களில் மற்ற இசையமைப்பாளர்கள் சமன் செய்ய வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். தற்போது குறிப்பிட்டு சொல்லும் படியான படங்கள் அவர் கைவசம் இல்லை
பல இளம் இசையமைப்பாளர்கள் முன்னணியில் இருந்தாலும் இவருக்கு இருக்கும் இசை வரவேற்பு மற்றவர்களுக்கு இல்லை. மேடை இசை கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்துவதன் மூலம் எப்போதும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறார். அவரது 80வது பிறந்தநாள் ஜூன் 2ம் தேதி வருகிறது.
அதனையொட்டி, இளையராஜா அன்றைய தினம் கோவை, கொடீசியா வளாகத்தில் இசைக்கச்சேரி நடத்துகிறார். இதுபற்றி இளையராஜா கூறியிருப்பதாவது ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**