பாலியல் துன்புறுத்தல்: மௌனத்தைக் கலைத்த நடிகர்!

Published On:

| By Balaji

நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் தற்போதைய தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகர். அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமான இவர், தன்னுடைய இயல்பான நடிப்பால் மொழிகள் கடந்து ரசிகர்களைப் பெற்றார். அடிப்படையில் பத்திரிகையாளரான இவர் அர்ஜுன் ரெட்டி வெற்றியைத் தொடர்ந்து பரபரப்பான நடிகரானார்.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சிறுவயதில் தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டிருக்கிறார். “நான் சிறு வயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன். இந்த சோகத்தைப் பற்றி வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நினைக்கையில் எனக்கு இதுதான் கண்முன் வருகிறது” என்று பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், உலகெங்கிலும் இரும்புக்கை கொண்டு அடக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வந்தாலும், சில தனியார் அமைப்புகள் “குட் டச், பேட் டச்” பற்றிய பிரசங்கத்தைப் பள்ளிகளிலும், பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளிலும் நிகழ்த்தி வருகின்றன. முன்பெல்லாம் இதுபோன்ற சம்பவங்களை வெளியே சொல்வது குடும்ப கௌரவத்தைக் கெடுக்கும் செயலாக எண்ணி, மூடி மறைத்தவர்கள் ஏராளம். சிறுவயதில் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் குழந்தைகள், பின்னாளில் தீவிர மனநோய்க்கு உள்ளாகின்றனர் என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குற்றவாளி சுதந்திரமாகத் திரியும்போது, அப்பாவி குழந்தைகள் குற்றவுணர்வுடன் வளர்கின்றனர்.

தற்போது இச்சூழல் மாறி வருகிறது, குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு ஆதரவாகப் பிரபலங்கள் தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து பொதுவெளியில் பதிவு செய்து, “நான் பயப்படவில்லை” என்று குறிப்பிடும் வகையில் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், ராகுல் இந்த மனநிலையிலிருந்து வெளியே வரமுடியாமல் ‘எல்லாமே காயத்தை ஏற்படுத்துகின்றன’ என்று இன்னுமொரு பதிவினை மேற்கொண்டிருக்கிறார். குழந்தைகள் பாதுகாப்புக்காக இந்திய அரசு போக்ஸோ என்ற சட்டத்தை உருவாக்கியிருக்கிறது. அது மட்டுமல்லாது வழக்குகளை பதிவு செய்ய 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளது.

பரத் அனே நேனு, சம்மொஹனம், சி-ல-சௌ, கீதா கோவிந்தம், கல்கி, ப்ரோசெவ்ரா போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றிய ராகுல், சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel