Nமாஃபியாவில் என்ன இருக்கிறது?

Published On:

| By Balaji

பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவிருக்கும் மாஃபியா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தைப் பற்றிப் பேசவந்த மாஃபியா டீம் முழுவதுமே ஒருவருக்கொருவர் நன்றியையும், சிறப்பாக நடித்ததற்கு வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர். படம் ரிலீஸாவதற்கு முன்பு நடைபெறும் விழா போல இல்லாமல், படத்தின் வெற்றிவிழா போல நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திரைக்கலைஞர்கள் பேசிய சில சுவாரஸ்யங்கள் .

**இயக்குநர் கார்த்திக் நரேன்**

“மாஃபியா” உருவாக காரணமாயிருந்த இருவர் லைகாவும், அருண்விஜய்யும் தான். இருவருக்கும் நன்றி. கதை விவாதத்தின் போதே அருண் விஜய், பிரசன்னா தான் மனதில் இருந்தார்கள். அவர்களே இந்தப்படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி. தடம் சமயத்தில் தான் அருண்விஜய்யிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. வெகு இயல்பாக இருந்தார். வெகு அற்புதமாக நடித்துள்ளார். பிரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரது நடிப்பில் இந்தப் படத்தின் வில்லன் வேடம் மிகச்சிறப்பாகப் பேசப்படும். ப்ரியா பவானி சங்கர் இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தக்கதாப்பாத்திரம் பற்றி கேட்டபோதே நான் வித்தியாசமாக யோசித்ததற்கு நன்றி என்றார். ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள். பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நான் ரசிகன். இதில் அருமையாக எழுதியுள்ளார். ஜேக்ஸ் அண்ணா துருவங்கள் பதினாறு படத்தில் இருந்தே தெரியும். இந்தபடத்தில் உலகத்தரமான இசையை தந்துள்ளார். 33 நாட்களில் இந்தப்படத்தை எடுத்துள்ளோம் படக்குழுவின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. படக்குழு அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 21 படம் வருகிறது இது ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

**நடிகை ப்ரியா பவானி சங்கர்**

“மாஃபியா” எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நிறைய நல்ல நண்பர்களை வாழ்வில் தந்த படம். ஜேக்ஸ் இசை எனக்குப் பிடிக்கும். அருண், பிரசன்னா திரையில் வந்தாலே அவர்களது திறமை மிளிரும். கார்த்திக் தனக்கு என்ன தேவை என தெரிந்து வேலை செய்யும் மனிதர். இத்தனை சீக்கிரத்தில் இப்படியொரு படம் செய்ய, அவர் திறமையே காரணம். அருண் பலருக்கு முன்மாதிரியாக திகழ்பவர். என் வாழ்விலும் நிறைய பாதிப்பை தந்துள்ளார். ஒரு தோல்வியிலிருந்து மீண்டு எப்படி வெற்றி பெறுவது என கற்றுக்கொள்ள அவரிடம் நிறைய இருக்கிறது. வெற்றி இல்லாதபோது அவர் பின்பற்றிய கண்ணியமும், நேர்மையும் தான் வெற்றி கிடைத்தபோதும், அவரை மிகவும் தன்மையானவராக வைத்திருக்கிறது. ஷூட்டிங் முடித்ததும் காலை 3 மணிக்கு ஜிம்முக்கு போகாமல் வீட்டுக்குப் போங்கள் அருண். வீட்டில் ஆர்த்தி காத்திருப்பார். தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். “மாஃபியா” இனி உங்கள் கைகளில் இருக்கிறது. மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி.

**நடிகர் பிரசன்னா**

தமிழில் சொன்ன நேரத்தில், சொன்ன பட்ஜெட்டில், முடிக்க கூடிய இயக்குநர்கள் வெகு சிலர் தான். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி போன்றோர் வரிசையில் கார்த்தி இடம்பிடித்துவிட்டார். அவர் வெகு நீண்ட காலம் சினிமாவில் மிளிர்வார். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இயக்குநர் அவர். மிகச்சிறந்த திட்டமிடல் அவரிடம் இருக்கிறது. அருண் பற்றி ப்ரியா அழகாக சொல்லிவிட்டார். தோல்வியில் இருந்து மீண்டெழுவதில், பலருக்கு சினிமாவில் முன் மாதிரியாக இருக்கிறார். உங்களிடம் கற்றுக்கொள்கிறேன். தமிழை கூச்சமின்றி அழகாக பேசும் நாயகி ப்ரியா, அவர் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். விவேக்கின் பாடல் வரிகள் அனைத்தும் அருமை. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். படம் எங்களுக்கு நிறைவாக இருக்கிறது. உங்களையும் கவரும் நன்றி.

**நடிகர் அருண் விஜய்**

25 வருடம் சினிமாவில் இருந்திருக்கிறேன். இது என் குடும்பம் போல். 25 வருடம் எனக்கு நிறைய பேர் ஆதரவாக இருந்தார்கள், எனது குடும்பம், ரசிகர்கள் எல்லோரும் பெரிதும் ஆதரவாக உள்ளார்கள். 25ஆவது வருடத்தில் எனது முதல் படம் “மாஃபியா”. இயக்குநர் கார்த்திக் பார்வையில் என்னை எப்படி காட்டப்போகிறார் என ஆர்வமாக இருந்தேன். கார்த்திக்கை பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் எனபதில் படு தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும் படக்குழு அனைவருமே பெரும் பலமாக இப்படத்திற்கு உழைத்துள்ளனர். இவ்வளவு சீக்கிரத்தில் படமெடுப்பதன் பின்னணியில் பெரும் உழைப்பு இருக்கிறது. லைகா மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம். விவேக்கின் வரிகள் அற்புதமாக இருந்தது. பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய சந்தோஷம். மிக அர்ப்பணிப்பு மிக்க நடிகர். இந்தப்படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன். ப்ரியா என்னை பற்றி நல்லவிதமாக சொன்னதற்கு நன்றி. தமிழ் பேசும் அழகான ஹீரோயின். அவர் ஷங்கர் சார் படம் செய்கிறார். மிக ஜாலியானவர். திறமை மிக்க ஒரு நடிகை. அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு புது அனுபவத்தை இந்தப்படம் தரும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share