சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் நேற்று மாலை யூடியூப்பில் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களான ‘அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ டிரெய்லர், யூடியூப் பார்வை எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு ஷாப்பிங் மாலுக்குள் மக்கள் பலரை தீவிரவாதிகள் கடத்தி வைத்திருப்பார்கள். அந்த மாலுக்குள்ளேயே செக்யூரிட்டி வேலை பார்க்கும் யோகி பாபு எப்படி காப்பாற்றுகிறார் என்று நகைச்சுவையாகச் சொன்ன படம்தான் கூர்க்கா. யோகி பாபு நடித்து 2019இல் வெளிவந்த இந்தப்
படத்தின் கதையை நினைவூட்டுகிறது பீஸ்ட் டிரெய்லர். இந்தப் படத்தில் அதே மால், அதே மக்கள், அதே செக்யூரிட்டி, கூர்க்கா யோகி பாபுவுக்குப் பதில் சோல்ஜர் விஜய். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் ‘கூர்க்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த யோகி பாபு, பீஸ்ட் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பீஸ்ட் படத்தின் முழு கதையும் இந்த மாலுக்குள்ளேயே தான் நகரும் போலிருக்கிறது. டிரெய்லரின் ஆரம்பமே மிகச் சாதாரணமாக இருக்கிறது. எந்த ஒரு அதிரடியும் இல்லை. விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். டிரெய்லரில் ‘பயமா இருக்கா, இதைவிட இன்னும் பயங்கரமா இருக்கும்’ மற்றும் ‘ஐயாம் எ சோல்ஜர்’ என்ற இரண்டு வசனங்களை மட்டும்தான் பேசுகிறார் விஜய். டிரெய்லர் முழுவதிலும் செல்வராகவன் தான் ஆதிக்கம் செலுத்துகிறார். டிரெய்லரில் நாயகி பூஜா ஹெக்டே, துணை நடிகை போல ஒரே ஒரு காட்சியில்தான் வந்து போகிறார். டிரெய்லரில் ஒரே ஒரு பாடல் ஒலிக்கிறது. அனிருத்தின் பின்னணி இசையிலும் வேகம் இல்லை, விஜய் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் டிரெய்லர், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லாமல் பயமுறுத்துவதாகவே உள்ளது.
#BeastTrailer celebration everywhere 🔥
Thirai thee pidikum on April 13th 😎@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/UZleX5aVva— Sun Pictures (@sunpictures) April 2, 2022
பீஸ்ட் டிரெய்லர் வெளியானதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள கோயம்பேடு ரோகிணி திரையரங்கு நிர்வாகம் நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் ‘பீஸ்ட்’ டிரெய்லர் திரையிடப்பட்டது. அதை அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடினர். இதனால் ரோகிணி திரையரங்கம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
**அம்பலவாணன்**