மிகக் கொடூரமான ஒரு விபத்து ஏற்பட்டு 12 மணி நேரம் முடிவதற்குள்ளாக அதைப்பற்றிய பல கட்டுக்கதைகள் வெளியாகத் தொடங்கின. கமலும், ஷங்கரும் ஸ்பாட்டிலேயே இல்லை; இது தொழில்நுட்பக் கோளாறு என்பன உட்பட பலவாறு பேசப்பட்டன. இதில் மிக முக்கியமாக கமலின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவே இல்லை என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த கட்டுக்கதைகள் அனைத்தையும் மனசாட்சியுள்ள அந்த மனிதன், காயப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வெளியே வந்ததும் உடைத்துவிட்டார்.
இவ்வளவு பெரிய விபத்தில் கமலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை மட்டும் மக்கள் மத்தியில் நிறுவ முற்பட்டதற்குக் காரணம், தமிழ் சினிமாவின் ஹீரோயிச சென்டிமெண்ட். பெரும்பாலான தமிழ் சினிமாக்களில், சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, ஹீரோ மட்டும் கடைசியில் உயிர் பிழைத்துவிடுவார். அப்படியே ஹீரோக்கள் இறந்துபோனாலும், மறுபிறவி அல்லது ஆற்றில் விழுந்து தப்பிப்பது என எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள். ஆனால், உண்மையில் சூழல் எப்படி இருக்கிறது என்றால், கமல் விழுந்த டெண்ட் கொட்டாயின் மேலே தான் அத்தனை பெரிய கிரேன் விழுந்திருக்கிறது. அந்த டெண்ட் கொஞ்சம் பலமானதாக இருந்ததால், அந்த கிரேன் நகர்ந்துபோய் தரையில் விழுந்திருக்கிறது. அப்போதும்கூட, வெறும் நான்கு நொடிகளுக்கு முன்பு கிரேன் விழுந்த இடத்தில் தான் ஷங்கர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவரும் தப்பித்திருக்கிறார்.
கமல்ஹாசன் என்ற திரைக்கலைஞனின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படும்படியான சூழல் ஸ்பாட்டில் இல்லை என்று நிறுவ முயல்வதற்குக் காரணம், லைகா நிறுவனத்தின் புரொடக்ஷன் யூனிட்டின் மேல் எவ்வித அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தான். புரொடக்ஷனில் ஏற்பட்ட சில குளறுபடிகளால், தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையான, வாழும் ஜாம்பாவான் என்றழைக்கக்கூடிய கமல்ஹாசனுக்கு ஆபத்து ஏற்படவிருந்தது என்பதை தமிழ்த் திரையுலகமோ, தமிழகமோ ஜீரணிக்காது என்பதால் ‘கமல் பத்திரமாக இருந்தார்’ என்பதை நிரூபிக்க இத்தனைப் பெரிய முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒரு டிரெண்டு உருவாகியிருக்கிறது. அது படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் தானாக வெளியாகிவிடக்கூடாது என்பதும், அனைத்துமே புரொடக்ஷன் யூனிட்டின் புரமோஷன் திட்டப்படியே வெளியாகவேண்டும் என்பதும் தான். இது மிகச்சிறிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மூன்று சீசன்களை முடித்திருக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் மிகப்பெரிய அளவில் தலைதூக்கியது. அதாவது, இங்கிருக்கும் யூனிட் ஆட்களை வைத்து ஷூட்டிங் எடுத்தால், விஷயம் வெளியே கசிந்துவிடும் என்பதால், வெளி மாநிலங்களிலிருந்து புரொடக்ஷன் யூனிட்களை அழைத்துவந்து, முழுவதுமாக வெளி ஆட்கள் மூலமாக ஷூட்டிங்கை நடத்துவது தான். இதன்மூலம் ரகசியம் காக்கப்பட்டு அனைத்தும் புரமோஷன் டீமின் திட்டப்படி வேலை செய்ததால், இந்தியன் 2 மாதிரியான பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கும் இப்படிப்பட்ட திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர்.
வெளி மாநில தொழிலாளர்களை வைத்து ஷூட்டிங் நடத்துவதை எதிர்த்து தமிழக தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது, ‘மற்றவர்கள் இங்கு வரக்கூடாது என்று நீங்கள் கூறினால். நாளை நீங்கள் வெளியூர் ஷூட்டிங்குக்கு செல்லும்போது டபுள் பேட்டா வாங்குவது நடக்காமல் போகும். அங்கு நடக்கும் ஷூட்டிங்குக்கு அங்கிருப்பவர்களையே நியமிக்க நேரிடும்’ என்று தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய சம்மேளனங்களே ஒரு பொருளாதார மிரட்டலை நிகழ்த்தியிருக்கின்றன. வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்திற்குள் அனுமதிப்பதிலும், இங்கிருப்பவர்கள் வெளியூர் ஷூட்டிங்குக்கு செல்வதிலும் இருக்கும் மிகப்பெரிய சவால், மொழி.
வெளி மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரியும்போது அவர்களுக்கான கட்டளைகளைக் கொடுப்பவர் சரியான விதத்தில், அவர்களுக்குப் புரியும்படி கூறவேண்டும். அப்படி கட்டளைகளைக் கொடுப்பவர்களுக்கு அந்தத் தொழிலாளர்களின் மொழி தெரிந்திருக்கவேண்டும். அது ஒருவருக்கு மட்டும் தெரிந்திருந்தால் போதாது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், புரொடக்ஷன் ஹெட் என அனைத்துத் துறைகளின் தலைமைகளுக்கும் அந்த மொழி தெரிந்திருக்கவேண்டும். அப்படி தெரியாத பட்சத்தில், முன்னாடி வா, பின்னாடி செல் என்பதை மாற்றிச் சொல்லிவிட்டால்கூட அது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். அப்படித்தான் கேரளாவைச் சேர்ந்த ராஜன் என்ற ஆபரேட்டரின் மொழிப் பிரச்சினையால் நடைபெற்ற விபத்து மூவரின் உயிரையும், பத்துக்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும் வழிவகுத்திருக்கிறது.
விபத்து என்பதே அனைவரின் கைகளை மீறியும் நடப்பது தான் என கமல்ஹாசன் ஒரு உதாரணத்துடன் சொல்லிவிட்டார். ‘மூன்று வருடத்துக்கு முன்பு நான் அந்த இடத்தில் இருந்திருக்கிறேன். காயத்திலிருந்து மீண்டு வருவது எத்தனை கஷ்டம் என்பதை அறிந்தவன் நான்’ என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனாலும் ஒரு விஷயம் கமல்ஹாசனின் மனதை அரித்திருக்கிறது. அது கமல்ஹாசனுக்கு உதவியது போல எந்தவொரு இன்சூரன்ஸ் பணமும் இந்தத் தொழிலாளர்களுக்கு உதவப்போவதில்லை என்பது தெரிந்தபிறகு தான் கமல் இந்த ஒரு கோடி ரூபாய் பண உதவி குறித்து அறிவித்திருக்கிறார் என்கின்றனர் திரையுலகினர். பெரும்பாலான தொழிலாளர்களுக்கான யூனியன்கள் இன்சூரன்ஸ் திட்டத்தை சரிவர மேற்கொள்வதில்லை என பல ஆண்டுகளாக ஒரு பிரச்சினை தமிழ் சினிமாவில் இருந்துவருகிறது. ஆனால், இந்தப் பிரச்சினை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸில் இல்லை. தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள், ஒரு வேலையை செய்துமுடிக்கத் தேவையான அவகாசம், கருவிகளைப் பயன்படுத்த அவற்றில் திறமையான வேலையாட்கள் என அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதில் ராஜ்கமல் நிறுவனம் சமரசம் செய்வதே இல்லை. இந்த காரணத்தினால் தான், செலவு செய்யும் பணமும், ஷூட்டிங்கை முடிக்கும் காலமும் ராஜ்கமல் நிறுவனத்துக்கு அதிகமாகிறது என்கின்றனர் புரொடக்ஷன் துறையில் அனுபவம் மிக்கவர்கள். முழு சினிமாவும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால் அதற்கு ராஜ்கமல் நிறுவனத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்றும் கூறுகின்றனர். அப்படியிருந்தும் இந்தியன் 2 ஷூட்டிங்கில் விபத்து நடைபெற்றது எப்படி?
இந்தியன் 2 திரைப்படத்தைப் பொறுத்தவரையில் போஸ்டரில் ராஜ்கமல் நிறுவனத்தின் பெயர் இடம்பெறுவதற்காக கமல் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார். மற்றபடி கமல்ஹாசன் தரப்பிலிருந்து புரொடக்ஷனில் யாரும் தலையிடுவதில்லை. ஏற்கனவே, ரஜினியின் 2.0 திரைப்படத்தில் காலதாமதம், எக்ஸ்ட்ரா பட்ஜெட் என அனுபவப்பட்டுவிட்ட லைகா நிறுவனம் இந்தியன் 2 ஷூட்டிங்கில் அப்படி நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறது. இதற்காக ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கையும் கிடுக்குப்பிடி போட்டு உந்தியிருக்கின்றனர். எவ்வித சமரசத்துக்கும் இடம்கொடுக்காமல் அன்றைய நாள் திட்டமிட்ட ஷூட்டிங்கை முடித்தபின்னரே பேக்-அப் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி கடைசிக் கட்ட காட்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது தான் இந்தத் துயர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதிலுள்ள உண்மைகளை மறைத்துவிட்டு, யாருக்கும் பாதுகாப்பு கொடுக்க கமல் விரும்பவில்லை. எனவே தான், “100 கோடிகள், 200 கோடிகள் என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கான பாதுகாப்பை அளிக்கமுடியாத ஒரு துறையாக இருப்பதை அவமானத்திற்குரியதாகவே கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
**-சிவா**
�,