ஒரு குற்றத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவரை குற்றவாளியாகக் கருதி குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் சம்பவங்களைப் பார்க்காதவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள். அதிலும் சென்னை போன்ற நகரங்களில் நைட் ஷோ சினிமாவுக்குச் சென்று வருபவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கலாம். ஆனால், அந்தத் தொழில்நுட்பமே ஒருவரை கொள்ளை சம்பவத்தில் குற்றவாளியாக மாற்றினால் என்ன செய்வது? அப்படி குற்றவாளியாக சந்தேகத்துக்கு ஆளான புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜக்கரி மெக்காய் என்ற நபருக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
கம்ப்யூட்டர் புரொம்கிராமிங் பட்டதாரியான ஜக்கரி மெக்காய்க்கு வேலை கிடைத்திருந்த புதிது. இலகுவாக அலுவலகம் சென்றுவரக்கூடிய வகையில் புளோரிடாவின் கென்ஸ்விலா நகரில் ஒரு வீட்டை இரு நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு வாழ்ந்துவந்தார். ஒருநாள் தனது அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் இருந்த ரெஸ்டாரன்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஜக்கரிக்கு ஓர் இ-மெயில் வந்தது. அது கூகுளின் சட்ட விசாரணைகளுக்கான உதவிக் குழு (Legal investigations support team) மூலம் அனுப்பப்பட்டிருந்தது. அந்த மெயிலில் “வணக்கம். ஒரு குற்ற வழக்கில் நீங்கள் குற்றவாளியாக இருக்கலாம் எனக் கருதுவதால் உங்களது கூகுள் அக்கவுன்ட் பற்றிய அனைத்துத் தகவல்களும் வேண்டும் என்று கெய்ன்ஸ்விலே நகர போலீஸ் கேட்டிருக்கிறது. உங்கள் தகவல் போலீஸுக்குப் போக வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் நீதிமன்றத்தை அணுகி தடை பெற வேண்டும். ஏழு நாட்களுக்குள் தடை வாங்கினால் மட்டுமே உங்கள் தகவல் போலீஸுக்குக் கொடுக்கப்படுவதைத் தடுக்கமுடியும்” என்று அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புதிதாகக் கிடைத்த வேலையின் மூலம் அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேகரிக்கத் தொடங்கியிருந்தார் ஜக்கரி. நீதிமன்றம் சென்று வாதாடும் அளவுக்குத் தன்னிடம் பணம் இல்லாததால் என்ன செய்வதெனத் தெரியாமல் இருந்திருக்கிறார். முதலில் நம் மீது என்ன குற்றம் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்க விரும்பியவருக்கும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல பயம். கையில் கிடைத்ததும் கைது செய்துவிடுவார்கள் என்பது ஜக்கரிக்குத் தெரிந்திருந்தது. கூகுளிடம் தகவல்கள் கேட்காமல் நேரடியாகவே ஜக்கரியை போலீஸ் கைது செய்யாததற்குக் காரணம், ஜக்கரியின் கூகுள் அக்கவுன்ட் பெயர் வேறாக இருந்தது. எனவே, போலீஸால் ஜக்கரியைப் பிடிக்க முடியவில்லை. கூகுளின் தகவல் செல்லும்வரை போலீஸ் நம்மை கைது செய்யப்போவதில்லை என்ற தகவல் கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்க, மீண்டும் அந்த இ-மெயிலைப் பார்த்திருக்கிறார் ஜக்கரி. அதில், ஜக்கரி குற்றவாளியாகக் கருதப்படும் வழக்கின் ஆவணப் பதிவு எண் இருந்திருக்கிறது. அதைக் கொண்டு கெயின்ஸ்விலே போலீஸ் ஸ்டேஷனின் இணையதளத்துக்குச் சென்று தேடியிருக்கிறார். அப்போது, ஜக்கரியின் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில் இருக்கும் ஒரு பாட்டியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கும் ஜக்கரிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்ததால், இதிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்வதென ஜக்கரிக்குத் தெரியவில்லை. எனவே, தனது குடும்பத்தை நம்பி நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள செயின்ட் அகஸ்டின் நகரத்திலுள்ள தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ஜக்கரி.
வீட்டுக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் பெற்றோர்களுடன் செலவிட்டவர், டின்னர் சாப்பிட்டுக்கொண்டே பொறுமையாக நடந்தவை அனைத்தையும் கூறியிருக்கிறார். தன் மகனின் மீது குற்றம் இல்லை என்பதை அறிந்த அந்த வயதான பெற்றோர், தங்களது முதுமை கால வாழ்க்கைக்குச் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்து நல்ல வக்கீலாக வைத்து வழக்கை நடத்தச் சொல்கின்றனர். பெற்றோர் கொடுத்த பணத்தின் மூலம் ஒரு வக்கீல் மற்றும் டிடெக்டிவ் ஒருவரையும் தனது உதவிக்கு அழைக்கிறார் ஜக்கரி. அவர்கள் இந்த வழக்கில் சேர்ந்த பிறகே ஜக்கரியின் வாழ்வில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டிருக்கின்றன.
ஜக்கரிக்குக் அனுப்பப்பட்ட இ-மெயிலையும், கெயின்ஸ்விலே போலீஸ் ஸ்டேஷனின் இணையதளத்தில் கிடைத்த வழக்கு ஆவணத்தையும் வைத்து, வக்கீலாக நியமிக்கப்பட்ட காலெப் கென்யன் நடத்திய விசாரணையில், போலீஸ் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ‘ஜியோஃபென்ஸ் வாரண்ட்’டின் நடைமுறைப்படியே கூகுள் இந்த இ-மெயிலை அனுப்பியிருக்கிறது என்பதையும், ஏழு நாட்களுக்குள் தடை வாங்காவிட்டால் கூகுள் தகவல்களை போலீஸுக்குக் கொடுத்துவிடும் என்றும் காலெபுக்கு தெரியவந்திருக்கிறது. ஜியோஃபென்ஸ் வாரண்ட் என்பது, வீட்டில் சோதனை நடத்த பெறப்படும் சர்ச் வாரண்ட் போலவும், கைது செய்வதற்கு முன்பு பெறப்படும் அரெஸ்ட் வாரண்ட் போலவும் டிஜிட்டல் தளத்தில் ஒருவரது தகவலைப் பெறுவதற்காக போலீஸ் தரப்பில் பெறப்படும் ஒரு வாரண்ட். இதன்மூலம் ஒரு தனிநபரின் ஜிபிஎஸ், ப்ளூடூத், வை-ஃபை மற்றும் அந்த நபர் இயங்கும் அத்தனை இணைய நடவடிக்கைகளின் பதிவுகளையும் போலீஸால் பெறமுடியும். இப்படிப்பட்ட வாரண்டைத் தனக்கு எதிராக போலீஸ் ஏன் பெற்றிருக்கிறது என்பதை அறிய தனது இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் சோதனை செய்திருக்கிறார் ஜக்கரி. அப்போது தான், அவ்ருக்கு உண்மை புரியத் தொடங்கியிருக்கிறது.
உடல்நலனில் அக்கறை கொண்டு தினம் செய்யும் பயிற்சிகளைக் கணக்கிடுவதற்காக ரன்கீப்பர் என்ற அப்ளிகேஷனை ஜக்கரி பயன்படுத்தியிருக்கிறார். நாள் ஒன்றுக்கு எவ்வளவு தூரம் ஜக்கரி பயணம் செய்கிறார் என்பதை அந்த அப்ளிகேஷன் பதிவு செய்து வந்திருக்கிறது. அப்ளிகேஷனில் பார்க்கும்போதெல்லாம் நாம் பயணம் செய்த வழியைக் காட்டும் இந்த வகையான அப்ளிகேஷன்கள் அதற்கான தகவல்களை சேமித்துக்கொண்டே வரும். அப்படி தன் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிய ஜக்கரி, கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2019, மார்ச் 29ஆம் தேதியன்று அந்த வீட்டைக் கடந்து மூன்று முறை சென்றுவந்ததை அந்த ரன்கீப்பர் அப்ளிகேஷன் இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பல வழிகளிலும் பிடிக்க முயற்சி செய்த கெயின்ஸ்விலே போலீஸ் தரப்பு, கடைசியாக டிஜிட்டல் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்கிறது. அதன்மூலம், குற்றம் நடைபெற்ற தினத்தன்று அந்த வீட்டுக்கு அருகில் தென்பட்ட அத்தனை டிஜிட்டல் பதிவுகளையும் சேகரித்திருக்கின்றனர். அதில் சந்தேகப்படும் விதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஜக்கரியின் டிஜிட்டல் பதிவுகள் பல்வேறு நேரங்களில் அந்த இடத்துக்கு அருகில் கிடைத்திருக்கிறது. எனவே தான் ஜக்கரி மீது சந்தேகப்பட்டு இந்த வாரண்டைக் கொடுத்திருக்கிறது போலீஸ் தரப்பு.
ஜக்கரி பயன்படுத்திய ரன்கீப்பர் அப்ளிகேஷன், அவர் பயணித்த பாதையின் அடையாளங்களை அவரது கூகுள் அக்கவுன்ட்டில் சேமித்துக்கொண்டே வந்திருக்கிறது. அதுபோலவே, மார்ச் 29ஆம் தேதியும் ஜக்கரியின் பயண விவரங்களை அந்த அப்ளிகேஷன் சேகரித்து வைத்தது அந்தப் பகுதியிலுள்ள செல்போன் டவரில் பதிவாகியிருந்தது. இந்த விவரங்களை வைத்துக்கொண்டு, தகவல் சேகரிக்கப்பட்ட அந்த அக்கவுன்ட் யாருடையது, அந்த நபர் வசிக்கும் இடம், குற்றம் நடைபெற்றதற்கு முன்பிருந்து இப்போது வரை அவரது டிஜிட்டல் பதிவுகள் என்னென்ன ஆகிய தகவல்களைக் கேட்டு போலீஸ் கூகுளை அணுகியிருந்தது. தான் செய்யாத குற்றத்துக்குப் பதில் சொல்லவேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்தாலும், தான் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நிரூபிக்க போலீஸ் தரப்பிடம் போதுமான ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்த ஜக்கரி மற்றும் அவரது வக்கீல் ஆகிய இருவரும் நீதிமன்றத்தை நாடி, கூகுளிடமிருந்து போலீஸ் தரப்புக்குத் தகவல்களைக் கொடுக்கக் கூடாது என்று வாதாடினர். இதற்கு விளக்கமாக, ‘எவ்வித முகாந்திரமும் இல்லாமல் நான் அந்தப் பக்கம் சென்றதற்காகவே என்னைக் குற்றவாளியாகச் சந்தேகிப்பது தவறு. அத்துடன் போலீஸ் தரப்பில், குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஏதாவது துப்பு கிடைத்து என்னைச் சந்தேகப்பட்டால் அது சரியானதாக இருக்கும். ஆனால், என்னுடைய அனுமதியின்றி என் தகவல்களைச் சேகரித்து அவற்றை அனுமானத்தின் அடிப்படையில் ஒரு வழக்கின் ஆதாரங்களாகக் கருதுவது அனுமதிக்கமுடியாத ஒன்று என்று வாதாடினார்கள். இவர்கள் நீதிமன்றத்தை அணுகிய சில நாட்களிலேயே போலீஸ் தரப்பிலிருந்து தவறுதலாக ஜக்கரி மீது சந்தேகப்பட்டுவிட்டோம் என்று இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டனர். ஆனாலும், மிகப்பெரிய உரிமைப் போராட்டம் ஒன்று பதிலளிக்கப்படாமலேயே போய்விட்டது என்று ஜக்கரியும், காலெப்பும் வருத்தப்பட்டிருக்கின்றனர்.
உலக நாடுகள் பலவற்றிலுள்ள அரசு அமைப்புகள் இப்படிப்பட்ட தகவல்களை ஜியோஃபென்ஸ் போன்ற வாரண்டுகளின் மூலமே பெறுகின்றன. இந்தியாவைப் போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட வகையில் வழக்குகளைப் பதிவு செய்யத் தொடங்கினால், ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளாத மக்களால் தங்களது இ-மெயிலில் வரும் டிஜிட்டல் கடிதங்களைப் படிக்க முடியாமல் பல வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. எந்தச் சூழலிலும் ஒரு மனிதனின் டிஜிட்டல் அடையாளங்களைக் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கான முகாந்திரங்கள் இல்லாமல் கொடுக்கக்கூடாது என்ற டிஜிட்டல் பாதுகாப்பு இல்லாததே இப்படிப்பட்ட உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைகிறது. இதன்மூலம் சில இடங்களில் உண்மையான குற்றவாளிகளும் பிடிபடுவதால், ‘ஜியோஃபென்ஸ் வாரண்ட்’க்கு எதிரான குரல்கள் குறைந்திருக்கின்றன.
ஜியோஃபென்ஸ் வாரண்ட் மூலம் கூகுள் போன்ற நிறுவனங்களை அணுகியும் தங்களது தகவல்களைப் பெறக் கூடாது என நினைப்பவர்களும், இப்படியெல்லாம் எனது டிஜிட்டல் காலடித் தடங்கள் என்னுடைய கூகுள் அக்கவுன்ட்டிலேயே சேமிக்கப்பட்டு எனக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்பது தெரியாதே என்று சொல்பவர்களும் கூகுள் அக்கவுன்ட்டில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று அப்ளிகேஷன்கள் கூகுள் அக்கவுன்ட்டில் தகவல்களைச் சேமிக்கும் ஆப்ஷனை நீக்கிவிடலாம். டிஜிட்டலில் சுதந்திரம் என்பது அதைப் பற்றி முழுமையாகத் தெரியாத வரை தான். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நாம் சம்மதம் தெரிவிக்கும் Terms & Conditions பகுதியை எப்போது முழுவதுமாக படிக்கத் தொடங்குகிறோமோ அப்போதே நமது டிஜிட்டல் பயன்பாடு குறைந்துவிடும்.
**-சிவா**�,