சாத்தான்குளம் படுகொலை சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை மக்கள் நம்பவும், பகிரவும் வேண்டாம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரின் தாக்குதலால் மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஆங்கில மொழியில் விவரித்து பிரபல பாடகி சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த சம்பவம் எதிரொலித்தது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் பாடகி சுசித்ராவின் வீடியோவைப் பகிர்ந்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வந்தனர். மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர். மேலும் வழக்கில் சம்மந்தப்பட்ட பத்து காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவில் கூறப்பட்டிருக்கும் தகவல்களில் உண்மை இல்லை என்றும், வீடியோவை பார்க்கும் யாரும் அதனை நம்ப வேண்டாம் எனவும், பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.’ மேலும் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவதும் பகிர்வதும் வழக்கு விசாரணையை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”