பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், கரண் ஜோகர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து ரன்பீர் கபூரின் சகோதரி ரிதிமா கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர் மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்தைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், அவர் தாயார் நீது கபூர், இயக்குநர் கரண் ஜோகர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வந்தது. இவர்கள் மூவரும் அமிதாப் பச்சனுடைய பேரனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றதாகவும், அதன் வழி அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தகவலில் கூறப்பட்டது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது உண்மை தானா, அவர்கள் நலமாக இருக்கிறார்களா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரா, தனிமைப்படுத்தப்பட்டார்களா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்று கூறி ரன்பீர் கபூரின் சகோதரி ரிதிமா கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கவனம் ஈர்ப்புக்காகச் செய்கிறீர்களா? குறைந்த பட்சம் இந்தத் தகவலைச் சரிபார்க்கவோ, உறுதிபடுத்தவோ முயற்சி செய்தீர்களா? நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”