அடித்து நொறுக்கப்பட்ட சர்ச் ‘செட்’: கொதித்தெழுந்த கேரளம்!

Published On:

| By Balaji

கேரளாவில் வலதுசாரி இந்து கும்பல்களால் சிதைக்கப்பட்ட ‘மின்னல் முரளி’ படத்தின் தேவாலய செட்டைத் தொடர்ந்து, மாநில முதல்வர் முதல் அனைத்து திரைப்பட தொழிலாளர்களும் கொதித்தெழுந்துள்ளனர்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டோவினோ தாமஸின் புதிய படம் மின்னல் முரளி. இப்படத்திற்காக கேரளாவின் காலடி பகுதியிலுள்ள பெரியார் ஆற்றங்கரையில், படப்பிடிப்புக்கு தேவையான உரிய அனுமதி பெற்ற பின், பல லட்சம் செலவில் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, லாக்டவுன் காலத்திற்குப் பின் மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதனிடையில், இந்த அரங்குக்கு எதிரில் மகாதேவன் கோயில் இருந்ததாகவும், இந்த அரங்கு அமைப்பதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அந்த்ராஷ்டிர இந்து பரிஷத் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். மேலும், கொடுத்த புகார்கள் எதுவும் பலனளிக்கவில்லை. நமக்குக் கெஞ்சும் பழக்கம் இல்லை என்பதால் இடிக்க முடிவெடுத்தோம். தன்மானம் காக்கப்பட வேண்டும். இதை இடித்த அனைத்து ராஷ்ட்ரிய பஜ்ரங் தள தொண்டர்கள் மற்றும் அமைப்பின் மாநிலத் தலைவருக்கு மகாதேவன் அருள்புரிவார்” என்று ஹரி குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை(மே 24) இந்த அரங்கு சம்பந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மின்னல் முரளி படத்தின் தயாரிப்பாளர் சோபியா பால் தனது பேஸ்புக் பக்கத்தில், “கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படத்தின் முன் தயாரிப்புக்கு மட்டும் தேவைப்பட்டது. கோவிட் -19 தீவிரத்தால் படத்தின் முக்கியமான காட்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டியிருந்தது. அடுத்த ஷெட்யூலை காலடியில் எடுக்க திட்டமிட்டிருந்தோம். கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய ஒரு தேவாலயத்தின் மிகப்பெரிய அரங்கை நாங்கள் கட்டியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக தொற்றுநோயால் எங்களால் படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை. மீண்டும் தொடங்குவதற்கான அனுமதிகள் குறித்து அரசாங்க வழிகாட்டுதலுக்காக காத்திருந்தோம். காலடியில் உள்ள அரங்கு படத்தின் மிக முக்கியமான காட்சிக்காக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது. இருப்பிடத்தின் அரங்கை உருவாக்க தேவையான அனைத்து அனுமதிகளும் எடுக்கப்பட்டன. இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகப்பெரிய இழப்பு “என்று கூறியுள்ளார்.

மின்னல் முரளி படத்தின் இயக்குநர் பேஸில் ஜோசஃப், “சிலருக்கு இது நகைச்சுவையாக, விளம்பரமாக, அரசியலாக இருக்கலாம். எங்களுக்கு இது கனவு. ஊரடங்குக்குச் சற்று முன்புதான் அந்த அரங்கம் அமைக்கப்பட்டது. இந்தப் படம் சாத்தியப்பட இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தோம், பாடுபட்டோம். கலை இயக்குநரும் அவரது அணியும் பல நாட்கள் உழைத்து இந்த அரங்கத்தைக் கட்டினர். தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு உழைத்த பணம் செலவு செய்யப்பட்டது. தேவைப்பட்ட அனுமதி அனைத்தும் பெற்ற பின்தான் இந்த அரங்கம் அமைக்கப்பட்டது. எல்லோரும் ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய இந்த வேளையில் அந்த அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் என என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாகக் கேரளாவில். இதுகுறித்து நான் அதிர்ச்சியும், கவலையும் கொண்டுள்ளேன்” என்று பகிர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “கேரளாவில் மதவாத சக்திகள் விளையாட முடியாது. அரங்கை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். பெரும்பாவூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் நாயகன் டொவினோ தாமஸ், கேரள திரைப்பட ஊழியர்கள் சங்கம், நடிகை ரீமா கல்லிங்கல், இயக்குநர்கள் ரஞ்சித் சங்கர், ஆஷிக் அபூ, நடிகர் அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள தகவல்படி, முக்கிய குற்றவாளியான கரி ரத்தீஷ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நான்கு பேரை தேடி வருகின்றனர். இது குறித்து எஸ்.பி., கே கார்த்திக், சம்பந்தப்பட்டவர்கள் இப்பகுதியின் சமூக விரோத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கூறுகிறார். மேலும், “கரி ரதீஷ் பெயரில் ஏற்கனவே 29 வழக்குகள் உள்ளன. ஐபிசி பிரிவு 34, 149, 153 (அ), 379, 454 மற்றும் 427 ஆகியவற்றின் கீழ் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். மீதமுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

வலதுசாரி இந்து குழுக்களின் உறுப்பினர்களான அந்தராஷ்டிரா இந்து பரிஷத் (ஏ.எச்.பி) மற்றும் அந்தராஷ்டிரா பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தோர் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

**-முகேஷ் சுப்ரமணியம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share