கொரோனா வைரஸ் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் சமயத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்த பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. 40 பேர் செல்லக்கூடிய பேருந்தில் கொரோனா பாதித்த ஒருவர் இருந்தாலே, பயணத்தில் ஈடுபட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உள்ளாக்கும் சூழலில், பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்றிணைடும் கிரிக்கெட் போட்டியில் ஏற்படக்கூடிய பாதிப்பினை கருத்தில் கொண்டு, அதனை தடை செய்ய நாடெங்கிலும் இருந்து குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளை நடத்தும் பிசிசிஐ அமைப்பு இதற்கு பல்வேறு விளக்கங்களைக் கொடுத்தாலும், டெல்லியில் நடைபெறவிருந்த 7 ஐபிஎல் போட்டிகளும் தடை செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் டெல்லி துணை முதல்வரான மனிஷ் சிசோடியா.
சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறக்கூடிய போட்டி முதற்கொண்டு 7 போட்டிகளை டெல்லியில் நடத்த திட்டமிட்டிருந்தது ஐபிஎல். இதற்காக ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் சிறப்பு ஏற்பாடுகளுடன் தயாராகியிருந்தது. ஆனால், பொது இடங்களில் பெரியளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்திருக்கும் டெல்லி அரசின் அறிவிப்பை மனிஷ் சிசோடியா வெளியிட்டு டெல்லி மக்களின் அத்தனை கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். டெல்லி அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்தியாவின் மற்ற மாநிலங்களும் பின்பற்றுமா என்ற கேள்வியே கொரோனாவை எதிர்த்துப் போராடுபவர்களின் கவலையாக இருக்கிறது.
இந்திய அரசாங்கம் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு இருக்கும் நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வர விசா பதிவு செய்திருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் அப்ளிகேஷன் மறுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் சொந்த பாதுகாப்பு கருதி பல வீரர்கள் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஐபிஎல் நிர்வாகம் தனிச்சையாக இந்தப் போட்டிகள் நடைபெறாது என அறிவித்தால், கண்டிப்பாக பேசிய சம்பளத்தை கொடுத்தே ஆகவேண்டும். எனவே, வீரர்களாக மறுக்காவிட்டால் பெயரளவுக்காவது போட்டியை நடத்தியாகவேண்டிய கட்டாயத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் பிசிசிஐ இருக்கிறது.
**சிவா**�,