பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘பாதாய் ஹோ’ என்ற படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் மும்முரம் காட்டிவருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
தமிழ் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்றார். அந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த பாதாய் ஹோ என்ற காமெடி படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. தமிழில் திரைப்படத்தை என்.ஜே.சரவணன் இயக்கவுள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இணை இயக்குநராகப் பணியாற்ற உள்ளாராம். ஆயுஷ்மான் குர்ரானா கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, ஆர்.ஜே.பாலாஜியின் தந்தை ரோலில் சத்யராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. இதில் நடிக்க ப்ரியா ஆனந்த் 25 லட்சம் சம்பளம் கேட்பதாகவும் ஒரு தகவல்.
படத்தின் கதை இதுதான். திருமண வயதில் மகன் இருக்கும்போது, வீட்டில் அம்மா கர்ப்பமாகிவிடுகிறார். அதனால் வீட்டில் என்ன களேபரம் நடக்கிறது என்பதே ஒன்லைன். அம்மா கேரக்டரில் நடிக்க வைக்க நடிகையர் தேடல் தீவிரமாக நடந்துவருகிறது. இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை விரைவில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதாய் ஹோ திரைப்படம் 20 கோடி ரூபாய் செலவில் உருவாகி 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. மேலும் தேசிய விருதும், ஃபிலிம்பேர் விருதும் வென்றது குறிப்பிடத்தக்கது.
– ஆதினி
�,