sஅண்ணாத்த : அதிகாலை காட்சிக்கு அதிக கட்டணம்!

Published On:

| By Balaji

நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தமிழகமெங்கும் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

பெரிய நடிகர்கள் படம் என்றால் அதிகாலையிலேயே காட்சிகள் நடப்பது வழக்கம். ரஜினிகாந்த் படம் அதுவும் பண்டிகை நாளில் வெளியாகவிருக்கிறது என்பதால் இந்தப்படத்துக்கும் அதிகாலை 5 மணி காட்சிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில் நள்ளிரவு ஒரு மணிக்கே படம் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகமெங்கும் அதிகாலைக்காட்சி திரையிடும் திரையரங்குகளுக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கும் வாய்மொழி தகவல் என்னவென்றால்? அதிகாலைக்காட்சிக்கு 500 ரூபாய் விலை வைத்து நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யுங்கள். அடுத்த காட்சிக்கு திரையரங்குகள் இருக்கும் ஊர், நகரத்தை பொறுத்து 150, 300 ரூபாய் விலை வையுங்கள் என்று சொல்லியிருப்பதுதான் செய்தி.

திரையரங்குக்காரர்கள் வெளிப்படையாக விற்காமல் மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்கும் காலம் இருந்தது. அதனுடைய பங்குத்தொகை விநியோகஸ்தர்கள் கணக்கில் வராது மறைக்கப்பட்டு விடும். இந்த ஒரு தரப்பு கொள்ளை பலனை முடிவுக்கு கொண்டுவந்து முதல் நாள் சிறப்புக்காட்சி, அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கட் கட்டணங்களை விநியோகஸ்தர்களே தீர்மானித்து திரையரங்குகளுக்கு கூறிவிடும் நடைமுறை பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அண்ணாத்த படத்தை தமிழகம் முழுவதும் நேரடியாக வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இதனை அமுல்படுத்த கூறியிருக்கிறது.

அநீதியான இந்தக் கட்டணக்கொள்ளையை ஆளும்கட்சியைச் சார்ந்த நிறுவனமே செய்யத் தூண்டுகிறது. திரைப்படங்களில் மிகப்பெரிய நியாயங்களைப் பேசும் ரஜினிகாந்த் அதற்கு ஒத்துழைக்கிறார் என்பதுதான் வேதனை எனப் புலம்புகின்றனர் மக்கள்.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel