அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பா.ரஞ்சித். கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் & ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கினார். கிட்டத்தட்ட பத்து வருடங்களைத் தமிழ் சினிமாவில் நிறைவு செய்துவிட்டார் பா.ரஞ்சித்.
அடுத்ததாக, இவர் இயக்கத்தில் ரிலீஸூக்குத் தயாராகியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. ஆர்யா, துஷாரா, கலையரசன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் குத்துச்சண்டைப் போட்டியை மையமாக் கொண்டு படம் உருவாகியிருக்கிறது.
திரையரங்கிற்கு திட்டமிட்டு, ஓடிடி திரைக்கு வந்திருக்கிறது சார்பட்டா பரம்பரை. இந்தபடமானது, பிரைம் ஓடிடியில் ஜூலை 22ஆம் தேதி நேரடியாக வெளியாகிறது. படத்தினைப் பார்த்த ரஞ்சித்தின் நெருங்கிய வட்டாரத்தினர் பலரும் படத்தைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். மொபைல் திரையில் பார்க்காமல், ஹோம் தியேட்டர் சிஸ்டத்துடன் பெரிய திரையில் பார்க்க வாய்ப்பிருப்பவர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாக இருக்கும்.
சார்பட்டா பரம்பரை முடித்த கையோடு, பிர்சாமுண்டா வாழ்க்கை வரலாற்று படத்தின் பணிகளுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஞ்சித்தின் திட்டம் வேறொன்றாக இருக்கிறது. பிர்சா முண்டாவுக்கு முன்பாக இன்னொரு புதிய படமொன்றையும் துவங்கும் திட்டத்தில் இருக்கிறார் என்று செய்தியில் கூறியிருந்தோம். அந்த செய்தி உறுதியாகிவிட்டது.
பா.ரஞ்சித் இயக்க இருக்கும் புதிய படத்துக்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு கிடைத்த தகவல்படி, சார்பட்டாவில் நடித்த துஷாரா லீட் ரோலில் நடிக்கிறாராம். அதோடு, நாயகி மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரஞ்சித்தின் முதல்படமான அட்டக்கத்தி முழுக்க முழுக்க காதலை மையமாக் கொண்டு உருவான படம். ஆனால், காதலின் பெயரில் சொல்லப்படும் புனித பிம்பங்களை அடித்து நொறுக்கி, புதிய கோணத்தில் காதலை அணுகவைத்தது. தொடர்ச்சியாக சீரியஸான படங்களையே கொடுத்துவரும் ரஞ்சித், கொஞ்சம் லைட் ஹார்ட் திரைப்படமாக இதைத் திட்டமிட்டிருக்கிறாராம். இனிதான், கதை விவாதம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். விரைவில் படப்பிடிப்பையே துவங்குகிறாராம்.
**-தீரன்**
�,