கல்விமுறையால் மோசடி மன்னனாக மாற்றப்படும் ஒருவன், அதே கல்விக்காக சூப்பர் ஹீரோவாக மாறினால்?
பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ஹீரோ. இந்தப்படத்தில் மற்றொரு ஹீரோவாக அர்ஜுன் நடித்துள்ளார். ‘சின்ன வயசுல ஒரு ஸ்டூடண்ட் கிட்ட, ‘நீ என்ன ஆகப்போற?’ன்னு கேட்டா ‘பெரிய டாக்டராகி மக்களோட உயிரை காப்பாத்துவேன், மிலிட்ரியில போய் நாட்டைக் காப்பாத்துவேன்’னு சூப்பர் ஹீரோ மாதிரி பேசுவாங்க. ஆனா, படிச்சு முடிச்சு அவங்க நெனச்சமாதிரி வேலை கிடைச்சாலும், மத்தவங்களுக்கு உதவுற சூப்பர் ஹீரோ கனவ மறந்திருவாங்க. அதுக்கு நம்மளோட கல்வி முறை தான் காரணம்.’, ஹீரோ படத்தில் இரண்டுமுறை இடம்பெற்று, இரு ஹீரோக்களும் பேசும் இந்த வசனம்தான் படத்திற்கான காரணமும் மையக்கருத்தும்.
சக்திமானின் தீவிர ரசிகரான சக்திக்கு(சிவகார்த்திகேயன்) சிறுவயது முதலே சூப்பர் ஹீரோ ஆகவேண்டும் என்பது ஆசை. நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுக்கும் அவருக்கு மனிதனை விட அவன் கையில் இருக்கும் சான்றிதழ்கள் மீதுதான் அனைவரும் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவர போலிசான்றிதழ்கள் செய்துவிற்கும் மோசடி வேலையைச் செய்கிறார். அவரது பகுதியைச் சேர்ந்த மதி(இவானா) பொதுத்தேர்வில் சற்று மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் சொந்தமாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும் அளவிற்கு புத்திசாலியாக இருக்கிறார். பொறியியல் கல்லூரியில் அவருக்கு நேர்மையான முறையில் இடம் வாங்கித்தர சக்தி முயற்சிக்க கல்லூரி சீட்டுக்கு பதிலாக மதிக்கு திருட்டுப்பட்டம் கிடைக்கிறது. அவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதே நேரத்தில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர நினைத்து அதனால் குற்றவாளியாக்கப்பட்டு தலைமறைவாக வாழும் சத்யமூர்த்தி(அர்ஜுன்), பள்ளித் தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மாறுபட்ட கல்வி அளித்து அவர்களை கண்டுபிடிப்பாளர்களாக மாற்றுகிறார். அவரது மாணவியான மதி மரணமடைய பிரச்னை மற்ற மாணவர்களை நோக்கி நகர்கிறது. மதியின் மரணத்திற்கு நீதி கிடைத்ததா? எதற்காக மாணவர்கள் தேடப்படுகிறார்கள்? அவர்களைக் காப்பாற்ற சூப்பர் ஹீரோ எப்படி அவதாரம் எடுக்கிறார், என்பது தான் ஹீரோ திரைப்படத்தின் மீதிக்கதை.
மாணவர்களின் திறமையை வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டும் எடை போடக்கூடாது என்ற கருத்தை பல விதங்களில் ஹீரோ திரைப்படம் வலியுறுத்துகிறது. சாதனை புரிவதற்கு சான்றிதழ் ஒரு தடையல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப் படுத்தியிருப்பதற்காக நிச்சயம் ஹீரோ திரைப்படத்தைப் பாராட்டியாக வேண்டும். ஆனால் கருத்தைத் தாண்டி சிறந்த திரைப்படம் என்னும் நிறைவை ஹீரோ தந்ததா என்பதை அறியவேண்டும்.
ஒரு சாதரண மனிதராக இருந்தவர் சூப்பர் ஹீரோவாக மாற என்ன காரணம் என்பதற்கு விளக்கம் கூறப்படவேண்டியது அவசியம். ஆனால் ஹீரோ திரைப்படத்தில் அது நீளமான விளக்கமாக இருந்தது. பெரும் பணக்காரனான கார்பரேட் கல்வி நிலைய முதலாளி ஏழை மாணவர்களின் சிறு கண்டுபிடிப்புகளுக்கு எதிராக இத்தனை வீரியமாக செயல்பட வேண்டியதன் அவசியமும், நன்றாகப் படிக்கும் மாணவனான சிவகார்த்திகேயன் போலி சான்றிதழ் தயாரிக்கும் வேலைக்கு வந்ததற்காக கூறப்படும் காரணமும் நம்பும்படியாக இல்லை. பல இடங்களில் ஜென்டில்மேன் திரைப்படத்தைக் குறிப்பிட முயன்றுள்ளனர். ஹீரோ திரைப்படம் என்பதற்காக ஹீரோயினுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார்களோ என்று தோன்றியது. கல்யாணி சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். ஒரு சில காட்சிகள் கடந்தபின்னர் ரோபோ சங்கரையும் காணவில்லை. காதல் காட்சிகளும், சிரிக்க வைக்க பலமாக முயற்சி செய்த காமெடி காட்சிகளும் கூறவந்த வலிமையான கதைக்கு அவசியமற்றதாகவே தெரிந்தது.
சூப்பர் ஹீரோ எதிரிகளை அடிக்கும் சண்டைக்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகப்படம் பாராட்ட வைக்கிறது. ஜார்ஜ்.சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கைதட்ட வைக்கிறது. திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. திரைப்படத்தைக் கடந்து இறுதியில் வந்து சென்ற நிஜ ஹீரோக்கள் தன்னம்பிக்கையை இன்னும் ஒரு படி மேலே ஏற்றிச்சென்றனர். இன்றைய கல்விமுறையால் மாணவர்கள் எத்தனை இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும். மாணவர்கள் மதிப்பெண்களை வாங்கிக்குவிப்பதற்கான இயந்திரங்கள் அல்ல. முக்கியமாக ஹீரோ திரைப்படத்தில் கூறப்படுவது போன்று பாடங்களைப் படித்தால் மட்டும் போதாது, அதைக் கற்க வேண்டும்.
ஹீரோ திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
�,”