ரஜினி, கமலுக்கு என்ன கதை எழுதுவீர்கள்?: பாகுபலி கதாசிரியர் பதில்!

Published On:

| By Balaji

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இயக்குநராக சில படங்களைக் கொடுத்திருந்தாலும், ஒரு கதாசிரியராக இவருடைய வெற்றி மிகப்பெரியது. தெலுங்கு திரையுலகை இந்தியளவில் கவனிக்க வைத்த ஆகச்சிறந்த எழுத்தாளர். இயக்குநர் ராஜமௌலியின் தந்தை மட்டுமல்ல, அவரின் ஆஸ்தான கதாசிரியரும் இவர் தான்.

பாகுபலி எனும் பிரம்மாண்டத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜமெளலியின் அடுத்தப் படமான ‘ஆர். ஆர். ஆர்.’ படத்தின் கதை கூட விஜயேந்திர பிரசாத் எழுதியது தான். சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை காமெடி நடிகர் அலி தொகுத்து வழங்கினார். அந்த பேட்டியில் ரஜினி, கமலுக்கு என்ன கதை எழுதுவீர்கள் என்று கேட்டதற்கு சுவாரஸ்யமான பதில்களைக் கூறினார்.

விஜயேந்திர பிரசாத்திடம், ராஜமௌலி ஒரு ஹாலிவுட் படம் இயக்குகிறாராமே ? என்று கேட்டபோது, ஆமாம், ஒரு லைவ் அனிமேஷன் படம் இயக்குவதற்கானப் பணிகள் நடந்துவருகிறது” என்று புது தகவலை உடைத்தார்.

அதன்பிறகு, சில நடிகர்கள் பெயரைச் சொல்லி, இவர்களில் யாருக்கெல்லாம் கதை எழுதுவீர்கள், அப்படி எழுதினால் என்ன மாதிரியான கதை எழுதுவீர்கள் என்று கேட்டார் நடிகர் அலி. அதற்கு, “ பவன் கல்யாணுக்கு கதை எழுதத் தேவையே இல்லை. ஏனென்றால், அவர் படத்தில் பெரிதாக கதை இருக்காது. பவன் கல்யாண் படம் பார்க்க வரும் ரசிகர்கள், அவரை ஜாலியாக நாயகிகளுடன் நடனம் ஆட வேண்டும், வில்லனை புரட்டி எடுக்க வேண்டுமென்று மட்டுமே விரும்புவார்கள், கதையைத் தேட மாட்டார்கள்.

மகேஷ் பாபுவுக்கு கதை எழுதுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதனால், இயக்குநர் பூரி ஜெகன்னாத்திடம் உதவி கேட்பேன். ஏனெனில், அவருக்குத் தான் அந்த ஃபார்முலா தெரியும். அமிதாப் பச்சனுக்கு, பணத்தை செலவழிக்க யோசிக்கும் ஒரு கஞ்சனைப் பற்றிய கதை பொருத்தமாக இருக்கும்.

தமிழில் ரஜினி, கமல்ஹாசனுக்கு என்ன கதை எழுதுவீர்கள் என்று கேட்டதற்கும் சுவாரஸ்ய பதில்களைக் கூறினார். ரஜினிகாந்தை இராவணன் கேரக்டரில் நடிக்க வைக்க கதை எழுதுவேன். கமல்ஹாசனுக்கு என்ன கதை எழுதினாலும் வேஸ்ட் தான். அவர் பண்ணாத கதாபாத்திரமே இல்லையே” என்று பதிலளித்தார்.

**- ஆதினி**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share