இந்த வருடத்தை ‘தனுஷ் 43’ படத்தின் படப்பிடிப்பின் மூலம் துவங்கினார் நடிகர் தனுஷ்.
கார்த்திக் நரேன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த ஜனவரி 08ஆம் தேதி ஹைதராபாத்தில் ‘டி 43’ படம் துவங்கியது. தனுஷூக்கு நாயகியாக மாஸ்டர் புகழ் மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கிறது படக்குழு. இந்தத் தகவலை கூட மாளவிகா மோகனன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உறுதியும் செய்தார்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக ஒரு சின்ன ப்ரேக் எடுத்திருக்கிறார் தனுஷ். அந்த இடைவெளியில் ஹாலிவுட் படத்தில் நடிக்கச் செல்கிறார். அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸூக்காக ஹாலிவுட்டில் நடிக்கும் ‘க்ரே மேன்’ படத்திற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
அப்படியென்றால், தனுஷ் 43 எப்போது மீண்டும் துவங்கும் என்பது குறித்து விசாரித்தால், ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு நேரடியாக மே மாதம் கார்த்திக் நரேன் பட ஷூட்டிங்கிற்கு வருகிறாராம் தனுஷ். அதுவரை தனுஷ் அல்லாத காட்சிகளை மார்ச் மாதம் படமாக்க இருக்கிறார் இயக்குநர்.
ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. கூடுதல் அப்டேட்டாக, தனுஷ் & மாளவிகா மோகனன் இருவரும் நிருபர்களாக படத்தில் நடிக்கிறார்களாம். படத்தில் ரிச் லுக் வேண்டும் என்பதற்காக தான் ஹைதராபாத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது படக்குழு. கடந்த ஒரு மாதம் நடந்த படப்பிடிப்பானது ஹைடெக் சிட்டி பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது.
அடுத்ததாக தனுஷூக்கு கார்த்திக் சுப்பராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படமான ‘ஜெகமே தந்திரம்’ நேரடியாக ஓடிடியில் மார்ச் மாதம் வெளியாகிறது. தொடர்ந்து, மே மாதம் திரையரங்கில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘கர்ணன்’ படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**�,