கோலிவுட்டில் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அருண் விஜய். அவரது 25 வருடங்களைக் கணக்கில் எடுக்கும்போது, அதில் தவறிவிடாமல் இடம்பெற்றுவிடும் திரைப்படம் குற்றம் 23. சுவாரசியமான திரைக்கதை, தேர்ந்த நடிப்பு என அருண் விஜய்யின் இன்னொரு பக்கத்தை மக்களுக்குக் காட்டிய திரைப்படம் குற்றம் 23. இப்போது அந்தப் படத்தை உருவாக்கிய அதே கூட்டணி திரும்ப இணைந்திருக்கிறது.
குற்றம் 23 திரைப்படத்தை இயக்கிய அறிவழகனுடன் அருண் விஜய் இணைந்திருக்கும் திரைப்படத்தை ஏவி31 என்று அழைக்கின்றனர் படக்குழுவினர். இந்தப் படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை திருப்திபடுத்த காத்திருக்கிறார் அருண். ஆக்ஷன் ஹீரோ வரிசையில் இடம்பிடித்துவிட அருண் முயற்சி செய்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத ரசிகர்கள், அந்த ஆக்ஷன் ஹீரோவுக்கான வலிமையுடன் தனது உடலைத் தயார்படுத்திக்கொண்டு களமிறங்கியதும் அள்ளி அணைத்துக்கொண்டார்கள். எனவே, அந்த ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடையச் செய்ய, எவ்வளவு சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட அருண் விஜய் மூச்சை நிறுத்தக்கூடிய ஆக்ஷன் காட்சிகளுக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட 15 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்பில் டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் சேஸிங் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. சண்டைக் காட்சிகளோடு யமுனை நதிக்கரையிலும், ஆக்ரா, டெல்லியின் கூட்ட நெரிசலான சந்தைகளிலும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமிருப்பதால் அங்குள்ள பள்ளிக்கூடம் மற்றும் இதர அலுவலகங்களையும் அரசாங்கம் மூடிவருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பை திட்டமிட்டபடி பாதுகாப்புடன் நடத்திமுடிப்போம் என விடாப்பிடியாக செல்லவிருக்கிறது ஏவி31 டீம். ரெஜினா கசாண்ட்ரா இந்தப் படத்தில் முதல் முறையாக அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மிஸ் டீன் இண்டர்நேஷனல் 2016 பட்டம் பெற்ற ஸ்டெஃபி படேல் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
**-சிவா**
�,