தனுசு ராசி நேயர்களே திரைப்படத்துக்குப் பிறகு ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள ‘தாராள பிரபு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
அறிவியலும் டெக்னாலஜியும் வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் ‘சாத்தியமற்றது’ என்ற சொல்லுக்கு அதிக அவசியமே இல்லாமல் போய்விட்டது. அந்த வளர்ச்சியின் காரணமாக மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்டுவரும் சாதனைகளும் ஏராளம். பிரியப் போகும் உயிரை மீட்டுக் காக்கவும், மடிய நினைக்கும் மனதை மீட்டெடுக்கவும் இன்றைய மருத்துவ முறைகள் பெரிதும் உதவுகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று, ‘செயற்கை முறை கருத்தரித்தல்’.
அவ்வாறு இன்றைய சமூகத்தில் மிக முக்கியப் பிரச்னையாக மாறியுள்ள குழந்தையின்மை மற்றும் அதற்கு மாற்றம் தேடும் செயற்கை முறை கருத்தரித்தல் குறித்து தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்கள் வெளிவந்தது இல்லை. அத்தகைய கருத்தரித்தலின் ஒரு முறைக்கு உதவியாக அமையும் ஸ்பேர்ம் டோனர்கள் குறித்த கதையாக ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள தாராள பிரபு திரைப்படம் உருவாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரும் ரசிகர்களைப் பெற்ற ஹரீஷ் கல்யாண், ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘தனுசு ராசி நேயர்களே’ எனத் தொடர்ந்து நியூ ஜெனரேஷன் கதைகளில் நடித்துவருகிறார். அந்த லிஸ்டில் ஹரீஷ் தற்போது நடித்துள்ள தாராள பிரபு திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
2012-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான விக்கி டோனார் திரைப்படத்தின் ரீமேக்காக ‘தாராள பிரபு’ உருவாகியுள்ளது. கிருஷ்ண மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஹரீஷுக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதிக முக்கியத்துவம் உள்ள முழு நீள வேடத்தில் விவேக் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெயிலர் இன்று(பிப்ரவரி 24) வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்க்ரீன் சீன் மீடியா எண்ட்ர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்-மெர்வின், சீன் ரோல்டன், இன்னோ கேங்கா, பரத் ஷங்கர், கபீர் வாசுகி, மட்லி ப்ளுஸ் இசைக்குழு மற்றும் அனிருத் என எட்டு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”