அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்ற ஹர்பஜன் ‘கிங்’

entertainment

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி தனிப்பெரும்பான்மையுடன் சர்வாதிகாரம் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஹேடன், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், க்ளென் மெக்ராத் என ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் க்ரேட் எல்லாம் ஒரே நேரத்தில் முரட்டு ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்தனர்.

போதாக்குறைக்கு, இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 15 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருந்தது. இது அதற்கு முன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியே செய்யாத சாதனை. இதனால்தான் இந்திய ரசிகர்கள் பயங்கர திகிலோடு இந்தத் தொடருக்குக் காத்திருந்தனர்.

எதிர்பார்த்தபடியே முதல் போட்டியிலேயே இந்தியாவை அடித்து துவைத்தது ஆஸ்திரேலியா. மும்பை வான்கடேயில் நடந்த அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தொடர்ச்சியாக 16ஆவது வெற்றி. ஹேடனும் கில்கிறிஸ்ட்டும் சென்ச்சூரி போட்டிருந்தனர். இந்திய அணிக்கு வழக்கம் போல சச்சின் மட்டும் ஆறுதல் இன்னிங்ஸ் ஆடியிருந்தார்.

‘நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது’ மோடில் ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி மொத்தமாக இந்த சீரிஸை வாரிச்சுருட்ட போகிறார்கள் என்றே அத்தனை செய்தித்தாள்களும் ஆரூடம் கூறின. இந்திய ரசிகர்களும் ஒரு மோசமான சீரிஸ் தோல்வியை தாங்கிக்கொள்ள மனதை தயார்ப்படுத்தத் தொடங்கினர். ஆனால், நடந்ததோ வேறு.

இந்தத் தொடரில் இந்தியாவின் மெயின் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதில் 20 வயதே ஆன இளம் பஞ்சாபி ஆடியிருந்தார். முதல் இன்னிங்ஸில் மட்டும் அவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடக்கம். இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் எடுத்த முதல் ஹாட்ரிக் அதுதான்.

ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ஹேடன், ரிக்கிபாண்டிங், கில்கிறிஸ்ட் என ஆஸியின் ஆல்டைம் கிரேட்கள் அத்தனை பேரையும் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆறு விக்கெட்டுகள்.

வெல்லவே முடியாத ஆஸியை வீழ்த்தவே முடியாத ஆஸி பேட்ஸ்மேன்களை கிறுகிறுக்க வைத்தார். இந்த பெர்ஃபார்மென்ஸ் மூலமே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் குறிப்பாக 90’ஸ் கிட்ஸ்களின் மனதில் தனியிடம் பிடித்தார் ஹர்பஜன் சிங் எனும் டர்பன் அணிந்த மனிதர்.

இப்படிப்பட்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுபவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (டிசம்பர் 24) ட்விட்டரில் அறிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பிறந்து, 1998ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டோடு இணைபிரியாமல் பயணித்தார். அவரின் இந்த நீண்ட பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ செய்தியில், “பல்வேறு வழிகளில் இருந்தும் ஏற்கெனவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் கடினமான முடிவு எடுத்து, முன்னேறிச்செல்லும் தருணம் வரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முடிவை அறிவிக்க இருந்தேன். ஆனால், அதற்கான சரியான தருணத்துக்காக உங்களுக்காக காத்திருந்தேன். நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் வழங்கிய கிரிக்கெட்டிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன். 23 ஆண்டுக் கால அழகான, நினைவில் நிற்கும் பயணத்தில் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் கடந்த 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட்டில் இந்திய அணியில் தனது 17 வயதில் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் ஷார்ஜாவில் நடந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். டி20 போட்டியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார்.

டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய நான்காவது இந்திய வீரர் என்ற பெயரெடுத்த ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2,224 ரன்களையும் அடித்துள்ளார்; இதில் இரண்டு சதங்கள், ஒன்பது அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் 1,237 ரன்களை சேர்த்துள்ளார்.

2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார்.

2018ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதால் தமிழக ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமானார். ஒவ்வோர் ஆட்டத்துக்குப் பின்பும் தமிழில் ட்வீட் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை ‘திருபஜன் சிங்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு.

ஹர்பஜன் சிங் என்றாலே சர்ச்சை என்பதையும் மறக்க முடியாது. 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸுடன் மோதலில் இனவெறியுடன் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தடையிலிருந்து ஹர்பஜன் சிங் தப்பித்தார். அதன்பின் ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறை ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

குட் பை கிரிக்கெட்டர் ஹர்பஜன் கிங்!

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *