இந்த கொரியன் பட காப்பியா துல்கரின் ‘ஹே சினாமிகா’ ?

Published On:

| By Balaji

நடன இயக்குநர் பிருந்தா சமீபத்தில் திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் துல்கர்சல்மான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஹே சினாமிகா’.

நடன இயக்குநர் கலா மாஸ்டரின் தங்கை பிருந்தா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகின் மிக முக்கிய நடன இயக்குநர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக, மணிரத்னம் படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படியோ அதுபோல, பிருந்தா மாஸ்டரும் பணியாற்றுவார்.

நடன இயக்குநரான இவரின் இயக்கத்தில் கடந்த வருட மார்ச் மாதம் படம் துவங்கியது. கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்ததும் படப்பிடிப்பை தீவிரப் படுத்தி ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடித்துவிட்டார்கள் படக்குழுவினர். கடந்த டிசம்பரில் முழு படப்பிடிப்பும் முடிந்து, தற்பொழுது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது.

துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்துக்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தற்பொழுது எடிட்டிங்கில் இருக்கும் இப்படம் குறித்த புது தகவல் கிடைத்துள்ளது.

ஹே சினாமிகா படமானது ஒரு கொரியன் படத்தின் காப்பி என்று சொல்கிறார்கள். 2012-ஆம் ஆண்டு கொரியாவில் வெளியான ‘All About My Wife’ படத்தின் காப்பியே ‘ஹே சினாமிகா’ என சொல்லப்படுகிறது. இந்த கொரியன் படத்தின் கதை என்னவென்றால், காதலித்து திருமணம் செய்யும் மனைவியை ஒரு கட்டத்தில் நாயகனுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. அதனால், தன்னுடைய மனைவிக்காக புதியதாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறார் நாயகன். அவளை காதலில் விழவைத்து, நாயகன் எஸ்கேப் ஆக நினைப்பதே ஒன்லைன். இந்தக் கதையில் சில மாற்றத்துடன் தமிழில் உருவாகதாகச் சொல்கிறார்கள்.

கொரியனிலிருந்து நிறைய படங்கள் தமிழில் வந்திருக்கிறது. சில படங்கள் உரிமை பெற்று அதிகாரப்பூர்வமாக ரீமேக் ஆகும். ஆனால், சில படங்கள் எந்த உரிமையும் பெறாமல் காப்பி அடிக்கப்படும். ஹே சினாமிகா கொரியன் ரீமேக்கா? காப்பியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

**-ஆதினி**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share