மனிதம் மட்டும் புனிதம் எனப் பாடும் அடையாளமற்ற நாடோடி ஒருவன் அடையாள அரசியலால் வீழ்வதும், பின் மீண்டெழுவதுமே ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் கதை.
இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பாலத்துக்கு அடியில் முஸ்லிம் பெண்ணும், காஷ்மீரி பண்டிட்டும் தங்களுக்குப் பிறந்த குழந்தையை அச்சத்துடன் கைகளில் பற்றியிருக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் அவர்களும் கொல்லப்பட, ஏற்கெனவே அங்கிருக்கும் நாடோடி இசைக்கலைஞர் (கருணா பிரசாத்) அக்குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்று வளர்க்கிறார். அதற்கு ஜிப்ஸி (ஜீவா) என்றும் பெயரிடுகிறார்.
ஜிப்ஸியும் அவரது சீனியரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என தேசாந்திரியாக எந்த இடத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளாமல், நிரந்தரமாக எங்கும் தங்காமல் இசையோடும், குதிரையோடும், நட்சத்திரங்களோடும் வாழ்கிறார்கள். சீனியர் தன் மறைவுக்கு முன், ‘உனக்குன்னு ஒரு முகம் இருக்கு, அது உனக்காகவே படைக்கப்பட்டிருக்கு, அதை என்னிக்கும் மிஸ் பண்ணிடாதே’ என ஜிப்ஸியிடம் கூறுகிறார். அந்த முகம் ஒரு மரபுவழி முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான வஹீதாவின் (நடாஷா சிங்) முகம். நாகூர் தர்கா திருவிழாவில், தன் குதிரை ‘சே’வை வைத்து வித்தை காட்டச் செல்லும் ஜிப்ஸி, வஹிதாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். வஹிதாவும் ஜிப்ஸியை நேசிக்க, அவளது திருமணத்துக்கு முன்பு, ஊரை விட்டுச் செல்கின்றனர். இருவரும் வடமாநிலம் ஒன்றுக்குச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் தருணத்தில், அங்கு ஏற்படும் மதக் கலவரத்தால் இருவரும் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் நிலை என்னவானது, மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை.
குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது படம் இது. தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே இதிலும் எளிமையான அன்பை சிதைவுக்குள்ளாக்கும் புறக்காரணிகளைப் பற்றிப் பேசுகிறார். இம்முறை, அது அரசியல் லாபத்துக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் மதக் கலவரமாக இருக்கிறது. 2002 குஜராத் கலவரத்தின் முகமாகக் கருதப்படும் அஷோக் பார்மர் (ஆக்கிரமிப்பாளர்), குதுப்புதீன் (பாதிக்கப்பட்டவர்) ஆகியோரது கதைகளைப் படத்துக்கான மூலக்கூறாக எடுத்தாண்டிருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட இடத்தில் கதாநாயகி இருக்கிறார்.
டெல்லியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின் சுவடுகள் இன்னும் மறையாமல் இருக்க, மிகச் சரியான நேரத்தில் வெளியாகியிருக்கிறது ஜிப்ஸி எனக் கூறலாம். தேசமெங்கும் அழகிய நிலப்பரப்பும், இயற்கையும், பண்பான மனிதர்களும், பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரமும் நிறைந்திருக்க மதத்தின் பெயரால் செய்யப்படும் அரசியல் எவ்வளவு கீழானவை எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இடைவேளைக்கு முன் வரும் காட்சி வழக்கமான கலவரக் காட்சியாக இல்லாமல், காட்சிப்படுத்துதல் மூலம் வன்முறைக்கு அருகில் நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார்கள் படக்குழுவினர். சமகால அரசியல் சூழலை பகடியான வசனங்கள் மூலம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் படைப்பாளனாகத் தன் விமர்சனத்தை வைத்தபடியே இருக்கிறார் ராஜுமுருகன். அரசுக்கு எதிராக ஒரு ஸ்டேட்டஸ் போட்டாலே தேச விரோதி எனக் கூறும் காலத்தில், இந்தத் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஜிப்ஸியாக ஜீவா சரியான தேர்வு. குறிப்பாகப் படத்தின் பெரும்பான்மையான பாகங்கள் தொய்வடையும்போதெல்லாம், இவரது உற்சாகமும் பக்குவமும் கலந்த நடிப்பு நம்மை உட்கார வைக்கிறது. நாயகியாக வரும் நடாஷா அவரது பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனால், இவரது கதாபாத்திரம் செயலற்ற தன்மையில் இருப்பதால் பெரும்பான்மையான இடங்களில் சோபிக்கத் தவறுகிறார். சீனியர் ஜிப்ஸியாக வரும் நாடக நடிகர் கருணா பிரசாத் தன் அனுபவத்தால் பாத்திரத்துக்கு மெருகேற்றுகிறார். நாயகியின் அப்பா முத்தலிப்பாக வரும் லால் ஜோஸ் கச்சிதம்.
படத்தின் ஆகப்பெரும் பலவீனம் திரைக்கதை. காரணமே இல்லாமல் வெறும் விளைவுகள் மட்டுமே நடப்பது, இலக்கில்லாவிட்டாலும் சுவாரஸ்யமில்லாமல் பயணிக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள், குறிப்பாக இவர்களுக்கிடையிலான காதல், அதன் பின்னர் நடப்பவை என முக்கியமான அம்சங்கள் அனைத்தும் வலுவற்றே காணப்படுகின்றன. ‘சர்ப்ரைஸ் எலிமென்ட்’ எதுவுமில்லாமல் கதையின் பயணம் புதுமையின்றி, உருமாற்றமின்றி இருக்கிறது. இருவரும் ஊரைவிட்டுச் செல்கிறார்கள் என்பது சரி, அதன்பின் எங்கிருந்து அவர்களுக்குள் ஓர் இணக்கம் ஏற்படுகிறது, இவ்வளவு நாட்கள் வீட்டுக்குள்ளே இருந்துவிட்டு முதன்முறையாக வெளியேறும் பெண், அவ்வளவு எளிதாக ஒரு நாடோடி வாழ்க்கைக்குள் எப்படி நுழைவாள் போன்ற கேள்விகளுக்குப் பாடல்கள் மூலமே கடந்து சென்று விடுகிறார் இயக்குநர்.
பயணம், அரசியல், காதல், இசை என பல ஜானர்களில் பயணிக்கும் ‘ஜிப்ஸி’, எந்த இடத்திலும் ‘நச்’சென மனத்தை ஆக்கிரமிக்கத் தவறுகிறது. படம் பார்த்து முடித்ததும், வாரப் பத்திரிகையின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை புரட்டியதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. வசனங்கள் மேம்போக்காகவே கையாளப்பட்டிருப்பது மற்றொரு குறை. சில இடங்களில் சரியான டைமிங்கில் தெரிக்கும் அரசியல் வசனங்கள், பல இடங்களில் பேச வேண்டும் என்பதற்காகவே கொடுக்கப்பட்டதைப் போல இருக்கிறது. நாடோடித் தன்மையோடு தொடங்கும் திரைப்படம் பின்னர், வழக்கமான தமிழ் சினிமாவாக மாறுமிடம் சலிப்பையே ஏற்படுத்துகிறது.
ஜிப்ஸி குறித்த திரைப்படம் என்றாலே இசை தான் முதல் நாயகன். சந்தோஷ் நாராயணன் இசையில் தேசாந்திரி, காதெல்லாம் பூ மணக்க ஆகிய பாடல்கள் ஏற்கனவே ‘ஹிட்’ ஆனதால் திரையில் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், பின்னணி இசை, கதை பயணிக்கும் எந்த நிலப்பரப்போடும் ஒட்டாமல் பொதுவான ஓர் இசையாக இருப்பது உறுத்தல். குறிப்பாக நாடோடிகள் பற்றி பேசும் படத்தில், நாடோடித்தன்மையற்ற இசை, பாடல்கள் முரண். இரண்டாம் பாதி ‘ராக் ஸ்டார்’ படத்தை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதே நேரம், இசை என வரும்போது அந்தப் படம் தொட்ட உச்சத்தின் பாதியளவுகூட ‘ஜிப்ஸி’ தொடவில்லை என்பது வருத்தமே.
ஜீவாவுக்குப் பிறகு படத்தின் மற்றொரு பலம் ஒளிப்பதிவு. மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பை, அதன் அழகியலும் அசல் தன்மையும் மாறாமல் சிறப்பான கோணங்களில் படமாக்கித் தந்திருக்கிறார் செல்வகுமார் எஸ்.கே. வஹீதா அவளது வீட்டில் அறிமுகமாகும் காட்சியில், காட்சிகளின் தாளத்துக்கேற்ப படத்தொகுப்பு சிறப்பு. அதிகாலை வேளையில், திருமணத்துக்கு இன்னும் சில மணிநேரங்கள் இருக்கையில், வஹீதா ஜிப்ஸியிடம் குதிரையில் அழைத்துச் செல்லச் சொல்லுமிடம் அழகு. அதன் பின்னர் நடக்கும் காட்சிகள் எதிர்பாரா ஆனந்தம். முழுமையான திரை அனுபவமாக மாறாவிட்டாலும், ‘ஜிப்ஸி’க்கான தருணங்களுக்காக ஒரு முறை ரசிக்கலாம்.
**ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்திருக்கிறார்; எழுத்து – இயக்கம்: ராஜுமுருகன்; நடிப்பு: ஜீவா, நடாஷா சிங், சன்னி வைன், லால் ஜோஸ், கருணா பிரசாத், சுசீலா ராமன். இசை: சந்தோஷ் நாராயணன்; ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே; படத்தொகுப்பு: ரேமண்ட் டெரிக் கிரஸ்டா; கலை: சி.எஸ்.பாலச்சந்தர்; சவுண்ட் மிக்சிங்: அழகைகூத்தன் –சுரேன்.ஜி**
**- முகேஷ் சுப்ரமணியம்**
�,”