�தயாரிப்பாளர் சங்கம்: உடைக்கும் பாரதிராஜா… இணைக்கும் தாணு- க்ளைமாக்ஸ் என்ன?

entertainment

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1300 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் சுமார் நாற்பது முதல் ஐம்பது தயாரிப்பாளர்களை மட்டும் வைத்து, ‘தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தை சில நாட்களுக்கு முன் தொடங்கியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இதற்கு மீதமுள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த சங்கத்துக்கு விஷால் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்து அடுத்த தேர்தல் நடக்க இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எனவே தயாரிப்பாளர் சங்கம் இப்போது அரசின் தனி அதிகாரி மேற்பார்வையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில்தான் தயாரிப்பாளர்களில் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு பாரதிராஜா புதிய சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்னால் அப்படியெல்லாம் நான் ஆரம்பிப்பதாக வந்த தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்திருந்த பாரதிராஜா, மீண்டும் ஏனோ புதிய சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இதுகுறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்டு 6) சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசித்து, ‘பாரதிராஜாவை சில கெட்டவர்கள் இயக்குகிறார்கள். அவர்களிடம் இருந்து விடுபட்டு மீண்டும் தாய் சங்கத்துக்கே வரவேண்டும்’ என்று ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் தயாரிப்பாளர்கள் பேசினார்கள். முதலில் கலைப்புலி தாணு பேசினார்.

**பாரதிராஜா வந்தால் அவர்தான் சங்கத் தலைவர்- கலைப்புலி தாணு**

‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த சங்கம் இது. அம்மா அரவணைத்த சங்கம் இது. 1300 உறுப்பினர்களைக் கொண்ட சங்கம்தான். ஆனாலும் இப்போது சுமார் ஐம்பது பேர்தான் படம் தயாரிப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் படம் போட்டு பணம் எடுத்தவர்கள்தான். இன்று அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் இந்த சங்கத்தின் மூலம் கிடைக்கும் உதவிகளை எதிர்பார்த்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 900 உறுப்பினர்களுக்கு நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு நான்கு லட்சம் ரூபாய் இன்ஷுரன்ஸ் எடுத்துக் கொடுத்து அதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அதோடு மட்டுமில்லை… இருநூறு உறுப்பினர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை இந்த சங்கத்தில் இருந்து போய்க் கொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல், வருஷப் பிறப்பு போன்ற நல்ல நாட்களுக்கு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு தாய் வீட்டு சீதனமாக இந்த சங்கம்தான் உதவுகிறது. இந்த சூழலில் பாரதிராஜா இந்த தவறை தெரிந்தே செய்யவில்லை. ஆனால் நான்கு பேர் சேர்ந்து அவரை சூழ்நிலைக் கைதியாக்கியிருக்கிறார்கள்.

நானும் அவரிடம் பேசினேன். என்னிடம் அவர், ‘சரிய்யா… கலந்து பேசிட்டு பண்றேன்ய்யா’னு சொன்னாரு. ஆனால் அடுத்த மூன்றாவது நாளே ஒரு கும்பல் அவரிடம் போய் உட்கார்ந்து அவர் மனதை மாற்றி அவரிடம் கையெழுத்து வாங்கி அறிக்கை கொடுத்துடுச்சு. நான் இப்போது சொல்றேன். பாரதிராஜா இங்கே வந்தார் என்றால் இந்த சங்கத்துக்கு அவர்தான் தலைவர். மற்ற பதவிகளுக்கெல்லாம் தேர்தல் வைத்துக் கொள்ளலாம். ஆனால் தலைமைப் பதவியை அவருக்கு தருவதற்கு தயாரா இருக்கோம். அவர் என்னென்ன நன்மை செய்ய வேண்டுமோ செய்யட்டும். தமிழுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோமோ அதே போல பாரதிராஜாவுக்கும் மரியாதை கொடுக்கிறோம்.

டான்சர் யூனியனில் சுமார் 1500 பேர் இருக்கிறார்கள். ஆனால் படம் பண்ணுகிறவர்கள் குறைந்தப்ட்சம் 100 பேர்தான் இருப்பார்கள். மீதி ஆயிரம் பேர் அந்த சங்கத்தின் நலத்திட்டங்களுக்காக இருக்கிறார்கள். பெப்சியில் 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றால், அதில் நடப்பு வேலை செய்வது இரண்டாயிரத்தில் இருந்து ஐயாயிரம் பேர்தான். ஸ்டன்ட் யூனியனில் 1000 பேர் இருப்பார்கள். ஆனால் அதில் வேலை செய்வது ஐம்பது பேர் வரைதான். அதனால் அந்த சங்கங்களை எல்லாம் கலைத்துவிட்டு நடப்பு சங்கம்னு ஆரம்பிக்கலாமா? யோசனை பண்ணுங்க. உங்க காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று உருக்கமான வேண்டுகோள் வைத்தார் கலைப்புலி தாணு.

**புதுமைப் பெண் எடுத்த பாரதிராஜாவா இது?- கமீலா நாசர்**

அடுத்து பேசிய தயாரிப்பாளர் கமீலா நாசர், “இயக்குனர் இமயம் பாரதிராஜா மேல் ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். அவர் ஏன் இப்படி பிரிஞ்சு போய் பன்ணாரு? இந்த சங்கம் தேர்தலை சந்திக்கிற நேரத்துல ஏன் இப்படி ஒரு முடிவெடுக்குறார்னு தெரியலை. ஒருவேலை தனி அதிகாரி மீது அரசு மீது கோபமா? அஞ்சு நாளைக்கு முன்னாடி அவருக்கு போன் பண்ணியிருந்தேன். அவர் போனை எடுத்தவுடனேயே, ‘என்ன சங்கம் ஆரம்பிக்கக் கூடாதுனு போன் பண்ணீங்களா?’னு கேட்டாரு. ‘சார் அதுக்கல்லாம் பண்ணலை சார்… உங்க காலுக்கு ரிட்டன் கால் பண்ணேன்’னு சொன்னேன். ஸ்டாப் இட் அப்படினு கோபமா சொன்னாரு. நான் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அப்ப அவர், ‘நான் நாசர் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். நீங்க எதுக்கு சங்கம் அது இதுனு பொது சேவைக்கெல்லாம் வர்றீங்க?’னு கேட்டாரு. அப்ப நான், ‘சார் ரொம்ப வருஷமா இந்த சங்கத்துல இருக்கேன் சார். படம் பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று சொல்ல, குறுக்கிட்ட பாரதிராஜா, ‘எங்க வீட்டு பெண்களை எல்லாம் நாங்க பொது சேவைக்கு அனுப்ப மாட்டோம்’னு ஒருவார்த்தை சொன்னாரு. ‘எனக்கு உடனே ஷாக்… என்னடா புதுமைப் பெண் எடுத்த பாரதிராஜாவா இப்படி பேசுறாருனு. சார் உங்க மேல நானும் மரியாதை வச்சிருக்கேனு சொல்லிட்டு போனை வச்சிட்டேன். அதுக்குப் பிறகு அவருக்கு எஸ்.எம்.எஸ்,. அனுப்பிச்சேன். இப்ப வரைக்கும் பதில் சொல்லலை.

பாரதிராஜா சார் புதுசா சங்கம் ஆரம்பிக்கிறார்னா அவர் அரசாங்கம் மேல கோபத்துல இருக்கார்னு நினைக்கிறேன். அவரைப் போயி நீங்க போகாதீங்கனு பஞ்சாயத்து நாம பண்ண வேண்டியதில்ல. அந்த அளவுக்கு நாம பெரியாளும் கிடையாது. அவரே யோசிச்சு இங்க வரணும்” என்றார்.

**விடுப்பு சங்கத்தை விட்டு தாய் சங்கத்துக்கு வாருங்கள்- ராஜன்**

மூத்த தயாரிப்பாளரான ராஜன் பேசுகையில் காரசாரமாகவே பேசினார்.

“ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் சிறப்பாக ந்டந்தது. இடையில் இதை துண்டாட வேண்டும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று யாரும் நினைத்ததில்லை. 1300 தயாரிப்பாளர்கள் வாக்குரிமையும், 3000 அசோசியேட் மெம்பர்களும் கொண்ட சங்கம் இது. நான் பாரதிராஜாவை கேட்கிறேன்… என்ன கஷ்டம் வந்தது உங்களுக்கு? இந்த தாய் சங்கத்தால் சிவாவுக்கோ, தனஞ்செயனுக்கோ என்ன கஷ்டம் வந்துவிட்டது? விஷால் இந்த சங்கத்துக்கு தலைவரான பிறகு 13 கோடி ரூபாயை காணாமல் போகச் செய்துவிட்டார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு யாரும் உதவி செய்யவில்லை. கஷ்டப்படுகிற இந்த காலத்தில் சங்கத்தை உடைப்பது மூத்த பிள்ளையான நீங்கள் செய்கிற காரியமா?

தனஞ்செயன் என்கிற மனிதர் ஊரார் பணத்தில் பணம் எடுத்து சில நிறுவனங்களை மூட வைத்தவர். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் 1300 பேரில் 800 பேர் தண்டச் சோறுங்க. பணம் எடுக்காதாவங்க. சங்கப் பணத்துல வாழுறவங்க’ என்று கூறினார். அதை கேட்டு நம் சகோதரர்கள் துடித்து கண்டனம் தெரிவித்தார்கள். அன்றைக்கே டி. சிவாவும், தனஞ்செயனும் இந்த சங்கத்தை உடைப்பது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

50 பேர் சேர்ந்து ஒரு சங்கமா சார்? 3000 பேர் உள்ள சங்கம் சொன்னால் கூட அரசாங்கம் கேட்கும். சங்கத்தை விஷால் மூடிவிட்டுப் போய்விட்டார். இப்போது தயாரிப்பாளர் சங்கத்தை அரசுதான் நடத்துகிறது. அதற்கான தனி அதிகாரி (எஸ்.ஓ.) இருக்கிறார்,. அந்த சிறப்பு அதிகாரி என்ன தவறு செய்தார்? அரசு சரியாக கவனிக்கலையா? நம் முதலமைச்சர் கூப்பிட்டவுடனேயே நம்மைப் பார்க்கிறாரே? நம் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூப்பிட்டவுடனே நமக்கு செய்கிறாரே? நமக்கு இல்லையென்று சொல்லவில்லையே? அதைவிட நீங்கள்( பாரதிராஜா) செல்வாக்கு மிக்கவராயிற்றே… நீங்கள் சொன்னால் அவர்கள் உடனே கேட்பார்களே? இந்த சூழ்நிலையில் நீங்கள் எங்களை அனாதையாக விட்டுவிட்டு போகிறீர்களே?

அண்ணன் பாரதிராஜா அவர்களே… இது இக்கட்டான கட்டம். ஆளாக்கிய அப்பா அம்மாவை விட்டுவிட்டு வெளியே போகாதீர்கள். நீங்கள் வாருங்கள். எங்களுக்கு வழிகாட்டுங்கள். நல் வழி காட்டுங்கள். அந்த விடுப்பு சங்கத்தை விடுத்து தாய் சங்கத்துக்கு வாருங்கள். என்ன கோரிக்கை என்றாலும் மூவாயிரம் பேரும் சேர்ந்து போராடுவோம். அண்ணன் அவர்களே சிலர் கெடுக்கிறார்கள் உங்களை அவர்களை நம்பாதீர்கள். நாங்கள் யாரையும் ஒதுக்கத் தயாராக இல்லை” என்றார் ராஜன்.

**புதிய சங்கம் தமிழ் சினிமாவை பின்னோக்கித் தள்ளும்- வீ. சேகர்**

மூத்த தயாரிப்பாளரான வீ. சேகரின் பேச்சில் அனுபவத்தின் ஆழம் தெரிந்தது.

“கரன்ட் ப்ரொட்யூசர்ஸ் சங்கம் என்று ஆரம்பித்திருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு பாரதிராஜாதான் தலைமை என கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தேன். அவரிடம் போனில் பேசினேன். நானும் அவரும் இருபது வருடம் சினிமாவில் தொழிற்சங்கத் துறையில் நண்பர்களாக இருந்தவர்கள், ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதற்கு தேவை இருக்க வேண்டும், ஒரு அவசியம் இருக்க வேண்டும். இப்போது தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

தமிழ் சினிமா பலமுனைப் போராட்டத்தில் இருக்கும் நிலையில் தனியாக ஒரு சங்கம் என்பது தமிழ் சினிமாவை பின்னுக்குக் கொண்டு போகிற விஷயம். பாரதிராஜா சார் யோசிக்க வேண்டும். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே யூனியனில் இருந்தவன். அவசியம் இருந்தால்தான் யூனியன் ஆரம்பிக்க வேண்டும். அவசியமில்லாத போது யூனியன் தொடங்கினால் அந்த தொழில் சிதைந்து போய்விடும். எனவே தயவு செய்து பாரதிராஜா மறுபரிசீலனை செய்து அந்த சங்கத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் இங்கே வரவேண்டும். உங்களுடன் புது சங்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த சங்கத்தில் படம் எடுத்து சம்பாதித்தவர்கள். இப்போது அவர்கள் போவது…. பிள்ளை சம்பாதித்த பிறகு அப்பா அம்மாவை விட்டுச் செல்வது போல இருக்கிறது” என்று பேசினார் வீ. சேகர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இப்போது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் பாரதிராஜா அந்த சங்கத்தை உடைத்திருப்பதன் பின்னால் அரசியலும் இருக்குமோ என்ற விவாதம் தமிழ் சினிமா வட்டாரத்தில் நடந்துகொண்டிருக்கிறது. எனினும் ஒரே சங்கமாக வைத்திருக்கவே கலைப்புலி தாணு தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *