கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடை: பறிக்கப்பட்ட தங்கப்பதக்கம்!

Published On:

| By Balaji

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்பட்டது. ‘அனபாலிக் ஸ்டீராய்ட் நான்ட்ரோலன்’ என்னும் மருந்தை கோமதி மாரிமுத்து, மீறிப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு தடகள ஒருங்கிணைப்பு பிரிவு அமைப்பு (ATHLETICS INTEGRITY UNIT) 4 வருடங்களுக்குத் தடை விதித்து அறிவித்துள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை எந்த தடகளப் போட்டியிலும் கோமதி மாரிமுத்துவால் பங்கேற்க இயலாது. மேலும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் முதல் மே 17 வரை கோமதி மாரிமுத்து பங்கேற்ற அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வென்ற பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பணமுடிப்பு என அனைத்தும் திரும்பப் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை ஊக்கமருத்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் விவகாரம் விளையாட்டு வட்டாரத்தில் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share