சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ பதிவை யாரும் நம்ப வேண்டாம் என்று சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இது குறித்து பாடகி சுசித்ரா விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரின் தாக்குதலால் மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா இது குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் சுசித்ராவின் வீடியோ பதிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், “பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவில் கூறப்பட்டிருக்கும் தகவல்களில் உண்மை இல்லை. இந்த வீடியோவைப் பார்க்கும் பொதுமக்கள் யாரும் அதனை நம்பவும், பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்” என்று கூறியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுசித்ராவும் தனது சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து அந்தப்பதிவை நீக்கிவிட்டார், இது தொடர்பாக மின்னம்பலத்தில் [சாத்தான்குளம் சம்பவம் குறித்த பாடகி சுசித்ராவின் வீடியோ: எச்சரித்த சிபிசிஐடி!](https://www.minnambalam.com/entertainment/2020/07/11/66/latest-tamil-cinema-news-cbcid-singer-suchitra-video-on-sathankulam-case)என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசாரின் எச்சரிக்கை குறித்து பாடகி சுசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “அந்த வீடியோவை விடுங்கள். அதன் வேலை முடிந்துவிட்டது. இப்போது இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்று மட்டும் பாருங்கள். அதுதான் முக்கியமானது. வீடியோவை அழிப்பது முக்கியமில்லை. நான் வீடியோவில் குறிப்பிட்ட எதுவும் நடக்கவே இல்லை என்று போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். இதுதான் என்னை கவலையடைய செய்கிறது. உண்மையான போஸ்ட் மார்ட்டம் தான் முக்கியம். ஊடகங்களே, உங்களுக்கு ஒரு நகல் கிடைக்கும்வரை ஓயாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ட்விட்டரில் ஒருவர், ‘20 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றதன் பின்னர், தமிழக காவல்துறையினர் சுசித்ராவிடம் வீடியோவை நீக்கம் செய்ய கேட்டுக்கொண்டனர்’என்று குறிப்பிட்டுருந்தார். அந்தப்பதிவைக் குறிப்பிட்டு, ** “திருத்தம்: சிபிசிஐடி என்னை அழைத்தார்கள். மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் விதமாக போலிச் செய்தி பரப்பிய குற்றத்திற்காக உங்களை கைது செய்ய நேரிடலாம் என்று எச்சரித்தார்கள். அதை அவர்கள் அதை நிச்சயம் செய்வார்கள் என்று என்னுடைய வழக்கறிஞர் அறிவுறுத்தியதால் தான் அந்த வீடியோவை நீக்கினேன். இந்த வழக்கைக் கவனியுங்கள் மக்களே – இதில் நிறைய தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.
ஐநா சபை வரை எதிரொலித்த இந்த சம்பவம் குறித்து மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்குடன் தொடர்புடைய பத்து காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், மருத்துவர்கள் உட்பட பலரிடமும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”