சாத்தான்குளம் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்ஃபோன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த கொடூரத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாத்தான் குளம்…. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
Director #SAChandrasekaran @directorsac#SathankulamCase#JusticeforJayarajAndFenix@PROSakthiSaran pic.twitter.com/oZXIVt3MHR— PRO Sakthi Saravanan (@PROSakthiSaran) July 1, 2020
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்த கொரோனா ஒரு கொடிய வைரஸ். பயங்கரமான வைரஸ். ஆனால் அதில் மாட்டிகிட்டவர்கள் கூட பலர் உயிரோடு திரும்பி வந்துள்ளார்கள். ஆனால் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்விப்படும் போது, அப்படிப்பட்ட போலீஸ்காரர்கள் இடம் மாட்டினால் என்ன ஆகும் என்று நினைத்து பார்க்கும்போதே ஈரக்குலை நடுங்குகிறது. இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ்காரர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக வேலை செய்து வருகிறார்கள். அதை மறக்கவும் முடியாது மறுக்கவும் கூடாது அப்படிப்பட்ட காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? இப்படிப்பட்ட கொடுமைக்காரர்களா? இந்த சாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அதுவும் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும். இவர்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் நடந்த இந்த கொலைவெறி சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்திருக்கிறது. பல்வேறு பிரபலங்களும் காவலர்களின் இந்த அதிகார மீறலுக்கும், அராஜகத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்துவரும் நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் போற்றிப் புகழப்படும் முன்னணி நட்சத்திரங்கள் மக்களுக்கு எதிரான இந்த கொடுமைக்கு குரல் கொடுக்க வராததைப் பற்றி பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இவர்களது போராட்டக் குரல் திரைப்படங்களில் மட்டும் தான் ஒலிக்குமா என்று கேட்டு கோபத்துடன் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். நடிகர் விஜய் இந்த சம்பவம் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காதது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை சாத்தான்குளம் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்திருப்பது அவர்களுக்கு சற்றே ஆறுதல் தந்திருக்கிறது. எனினும் விஜய் இது குறித்துப் பேசுவாரா? குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டி குரல் கொடுப்பாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”