இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர் மற்றும் மார்ச் இறுதியில் தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்த அறிவிப்பால் முடிவுக்கு வந்திருக்கின்றன.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி மழை பாதிப்பால் நடைபெறாமல் போனது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த போட்டிகளை கொரோனா பாதிப்பால் பூட்டிய ஸ்டேடியத்துக்குள், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும், ஒரு போட்டியில் ஈடுபடும் கிரிக்கெட் ஊழியர்கள் முதற்கொண்டு மைதான ஊழியர்கள் வரை பலரது உடல்நலன் இந்தக் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான சூழல் நிலவுவதால் யாருடைய உயிரையும் ஆபத்துக்குள்ளாக்கவேண்டாம் என்ற முடிவுடன் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் நீக்கி, மொத்தத் தொடரையும் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது பிசிசிஐ.
கொரோனா பாதிப்பால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிப் பேச இன்று(13.03.2020) காலை பிசிசிஐ அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் மும்பையில் நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்திற்கு நேரில் வந்தால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதெனக் கூறி, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவே இந்தக் கூட்டத்தை நடத்திமுடித்திருக்கின்றனர். இதில் எடுக்கப்பட்ட இன்னொரு முடிவு, ஏப்ரல் 15ஆம் தேதி வரையிலும் ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைப்பது.
மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இத்தனை களேபரத்திலும் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ கைவிடாதது பல மாநில அரசுகளினால் கண்டிக்கப்பட்டு, அரசாங்கமே தனிச்சையாக விளையாட்டுப் போட்டிகளுக்கு தடைவிதிக்கத் தொடங்கின. இந்நிலையில், ஐபிஎல் நிறுத்தப்படுவது மற்றும் நடத்துவது குறித்த சாதக, பாதகங்கள் பற்றிப் பேசிய பிசிசிஐ குழு ஏப்ரல் 15ஆம் தேதி வரையிலும் ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைத்திருக்கிறது.
**-சிவா**�,