தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் போக்கைத் தொடங்கி வைத்தவர் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். நடிகர்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் கட் அவுட் வைத்து கொண்டாடப்பட்டு வந்த சூழலில் தயாரிப்பாளருக்கும் கட் அவுட் வைக்கும் பழக்கத்தை உருவாக்கியவர் குஞ்சுமோன்.
சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் திரையுலகுக்குத் தந்தவர். பிரமாண்டமான படங்களைத் தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக் காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கவுள்ளார். இந்த ‘ஜென்டில்மேன்-2’ படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சமூக வலைதளம் முழுவதும் பரபரப்பானது.
இந்த நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை நேற்று (ஜனவரி 23) அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். சர்வதேச கவனத்தை ஈர்த்த ‘பாகுபலி’ போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இந்தப் படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இப்போது, இந்தியாவே பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜ்மௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தங்க காசு போட்டியில் பல ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். சிலர் சரியான பதிலைப் பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் தங்க காசு யாருக்கு என்பது விரைவில் அறிவிக்கப்படும். இதையடுத்து, இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதும் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் கே.டி.குஞ்சுமோன்.
**அம்பலவாணன்**
�,