“இன்னிக்கு நான் பத்து லட்சம் பேருக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன் என்றால், அது நடந்தது உங்களால்தான் அப்பா” என்ற ஓப்பனிங்குடன் விக்ரமுக்கு எழுதியுள்ள நன்றி அறிவிப்பைத் தொடங்குகிறார் அவரது மகன் துருவ். இதற்குக் காரணம், ஒரே ஒரு படத்தில் நடித்த துருவ் என்ற இளம் நடிகனை பத்து லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்திருக்கின்றனர். பத்து லட்சம் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு எத்தனையோ பேர் என்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கும் நிலையில், ஒரே படத்திலேயே துருவுக்கு இத்தனை ரசிகர்கள் என்றால் அதற்குக் காரணமாகத் தனது தந்தை எப்படி இருந்தார் என்பதை துருவ் தொடர்ந்து விளக்குகிறார்.
“ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மீது எனக்கே நம்பிக்கை இல்லாமல் போனபோதுகூட, அனைத்தையும் தன் தோள் மீது சுமந்துகொண்டு எனக்கான வழியை அவர் காட்டினார். ‘வாழ்க்கை உன் மீதே சந்தேகப்பட வைக்கும். அனைத்தையும் கைவிட்டுவிடலாம் என்ற அவநம்பிக்கையின் ஓரத்துக்கு உன்னை தள்ளிவிடும். ஆனால், நேர்மையுடன் கடின உழைப்பைக் கொடுக்க நீ தயாராக இருந்தால் எல்லாமே சாத்தியப்படும்’ என்பதை என் அப்பாதான் எனக்கு சொல்லிக்கொடுத்தார். ஆதித்ய வர்மா படம் முழுக்க நீங்கள்தான் அப்பா. அது ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அது எப்போதுமே என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும். நான் பல காலமாக ரசிகனாக இருந்த ஒரு சிறந்த நடிகனிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டு என்னையே நான் செதுக்கிய படம். உங்களுடைய பார்வைதான் என்னை இப்போது இங்கு நிறுத்தியிருக்கிறது. நம்முடைய கனவை ஒரு நாள் உண்மையாக மாற்றுவதற்கான கடின உழைப்பை நான் வழங்குவேன். உங்களைப் போன்ற ஒரு ஜாம்பவானாக என்னால் வர முடியாது என்று எனக்குத் தெரியும் என்றாலும், இதை நான் பெருமையுடன் சொல்வேன்” என்று தனது ஒரு மில்லியன் ஃபாலோயர்களுக்கும் தெரிவித்திருக்கிறார் துருவ்.
ஆதித்ய வர்மா திரைப்படத்தைப் பொறுத்தவரையில் அது விக்ரம் தனது மகனுக்குக் கொடுத்த முதல் நம்பிக்கை. ஆனால், படம் உருவாக்கப்பட்ட ஒருகட்டத்தில் அதன் கிரியேட்டர்களுக்கே பிடிக்காமல் போனது. பாலா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படம் முழுக்க முழுக்க ஒரிஜினல் ஸ்கிரிப்டுக்கு எதிர்மறையாக இருந்ததால், முழு படத்தையும் ஓரமாகப் போட்டுவிட்டு மீண்டும் படமாக்கினார்கள். அப்போது துருவ் பக்கத்திலேயே இருந்து ஒவ்வொரு காட்சிக்கும் அறிவுரை வழங்கி படமாக வெளியே கொண்டுவந்தவர் விக்ரம். இந்த மாதிரியான உணர்வு எப்படி இருக்கும் என்பது விக்ரமுக்குத் தெரியாமல் இல்லை. விக்ரம் ஹீரோவாக அறிமுகமான சேது திரைப்படம், கிட்டத்தட்ட ரிலீஸே ஆகாது என்று யோசிக்கும் அளவுக்கான பிரச்சினைகளைச் சந்தித்தது. ஆனால், கடைசி வரையிலும் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல், படம் ரிலீஸானதிலிருந்து இன்று வரையில் சினிமாவுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் விக்ரமிடமிருந்து துருவ் கற்றுக்கொண்ட பாடங்கள் அவரது எதிர்காலத்தை எப்படி மாற்றப்போகிறது என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் சாட்சியாக நின்று பார்க்கப்போகின்றனர்.
**-சிவா**�,